`உங்களால்தான் கோழிகளைக் காப்பாற்ற முடியும்’ - ஜெஃப் பெசோஸுக்கு மேடையில் வைக்கப்பட்ட `திடீர்’ கோரிக்கை | 'jeff Only you can save the chicken' Chicken protester in Amazon conference

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (07/06/2019)

கடைசி தொடர்பு:12:00 (07/06/2019)

`உங்களால்தான் கோழிகளைக் காப்பாற்ற முடியும்’ - ஜெஃப் பெசோஸுக்கு மேடையில் வைக்கப்பட்ட `திடீர்’ கோரிக்கை

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் உதவியுடன், செவ்வாய் கிரகத்தில் மனித நாகரிகத்தை வாழ வைக்க அமேசான் நிறுவனம் முயன்றுவருகிறது. அதுதொடர்பான ரீ மார்ஸ் மாநாடு இந்த வாரம் தொடங்கியது. அமேசானின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து, மேடையில் பேராசிரியர் ஒருவருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். 

அமேசான்

அப்போது, திடீரென மேடைக்கு வந்த விலங்குகள் நலப் போராளி ஒருவர், "ஜெஃப் ப்ளீஸ்... அமேசான் நிறுவனத்தின் தலைவரே நீங்கள்தான். உங்களால் மட்டும்தான் கோழிகளைக் காப்பாற்ற முடியும்" என்று சத்தமாக கத்தத் தொடங்கினார். 

டைரக்ட் ஆக்ஷன் எவெரிவேர் (Direct Action Everywhere) என்ற தன்னார்வ அமைப்பு, இந்தப் போராட்டத்துக்குப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்தான் இந்த மேடையேற்றப் போராட்டத்தை நடத்தியது. கையில் ஒரு வெள்ளை ரோஜாவுடன் ஏறியவர், "அமேசான் நிறுவனத்தின் கோழிப் பண்ணைகளில், ஆயிரக்கணக்கான கோழிகள் போதிய பராமரிப்பின்றி அவதிப்படுகின்றன. அதையெல்லாம் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவை, ஒருநாள்கூட அடைபட்ட கூண்டிலிருந்து வெளியே வருவதேயில்லை" என்று அவர் ஜெஃப் பெசோஸைப் பார்த்து பேசத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள், அவரைப் பேசவிடாமல் வலுக்கட்டாயமாகக் கீழிறக்கினார்கள். 

 

2017-ம் ஆண்டு மட்டும் 13.4 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அமேசான் நிறுவனம் கோழிகளை வாங்கியுள்ளது. ஹுயூமேன் சொசைட்டி என்ற அமைப்பு கூறும் தகவல்களின்படி, ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் 9 பில்லியன் கோழிகள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன. அதில் 70 சதவிகிதம், இதுபோன்ற பண்ணைகளில் வளர்க்கப்படுபவை. அவை, பிறந்ததிலிருந்து ஆறே வாரத்தில் வெட்டுவதற்குத் தகுந்த எடைக்கு செயற்கையாக வளர்க்கப்படுகின்றன. 

இதுகுறித்துப் போராட முயன்ற பெண்மணி, மேடையிலிருந்து இறக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்த சமயத்தில், அதைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமலே அமர்ந்திருந்த ஜெஃப் பெசோஸ், அவர் இறக்கப்பட்ட உடனே, தன் பேட்டியில் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.