துபாய் பேருந்து விபத்தில் 12 இந்தியர்கள் பலி - பெயர்கள் வெளியீடு | 12 Indians among 17 killed in Dubai bus crash

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:38 (07/06/2019)

துபாய் பேருந்து விபத்தில் 12 இந்தியர்கள் பலி - பெயர்கள் வெளியீடு

துபாய்

Photo Credit: https://twitter.com/DubaiPoliceHQ

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து துபாய்க்கு பயணிகள் பேருந்து நேற்று சென்றது. இந்தப் பேருந்தில் இந்தியர்கள் உட்பட 30 வெளிநாட்டுப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். மாலை 6 மணியளவில் ரஷிதியா பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்லக் கூடாது என்பதற்காகப் பெரிய உருளை போன்ற அமைப்பைச் சாலையில் பொருத்தியுள்ளனர். அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து அந்த உருளையின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.

பேருந்து மோதிய உருளை

Photo Credit:DubaiPoliceHQ

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 12 பேர்களின் விவரங்களைத் துணைத் தூதரக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய நான்கு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர். 

பேருந்து ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலையில் சென்றதே விபத்துக்குக்காரணமாக அமைந்துள்ளது. இரும்பு உருளையில் பேருந்தின் இடதுபக்கம் மோதியதில் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் பெயர்கள்:

1) விக்ரம் ஜவஹர் தாக்கூர்

2) விமல் குமார் கார்த்திகேயன் கேசவபிள்ளைகர்

3) கிரண் ஜானி 

4) பெரோஷ் கான்

5) ரேஷ்மா பெரோஷ் கான்

6) உம்மர்

7) நபில் உம்மர் 

8) வாசுதேவ் விஷான்தாஸ்

9) ராஜன்  கோபாலன்

10) பிரபுலா மாதவன் தீப குமார்
 
11) ரோஷினி 

12) ஜமாலுதீன்

பேருந்து விபத்தில் பலியானவர்களின் பெயர்கள்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரை இன்னும் அடையாளம் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த விபத்தில் பலியானவர்களில் 6 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ஜமலூதீன் என்பவர் மீடியா துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த விபத்தில் பலியான உம்மர் துபாயில் தொழில் செய்து வருகிறார். ஓமனில் வசிக்கும் தனது மகளின் குடும்பத்தினருடன் ரம்ஜானைக் கொண்டாட தன் மகன் நபில் உம்மருடன் சென்றுள்ளார். ரம்ஜான் முடிந்து ஓமனில் இருந்து துபாய் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து

Photo Credit:DubaiPoliceHQ

தீப குமார் துபாயில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன் மனைவி அதிரா மற்றும் நான்கு வயதுக் குழந்தையுடன் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஓமன் சென்றுள்ளார். இவர்கள் துபாய் திரும்பும்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீப குமார் உயிரிழந்துவிட்டார். அவரின் மனைவி மற்றும் குழந்தை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியர்களுக்கு உதவுவதற்காக சஞ்சீவ் குமார் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உதவிகள் தேவைப்படுவோர், +971- 504565441 என்ற எண்ணுக்கும் உதவிமையம் எண், +971- 565463903-க்கும் தொடர்புகொள்ளலாம்.