`ரத்தமும் சதையுமாக இருந்தது!' - துபாய் விபத்தின் திக் திக் நிமிடங்களை நினைவுகூரும் பயணி | Dubai Bus accident survivor Recounting the horror 

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (08/06/2019)

கடைசி தொடர்பு:18:47 (08/06/2019)

`ரத்தமும் சதையுமாக இருந்தது!' - துபாய் விபத்தின் திக் திக் நிமிடங்களை நினைவுகூரும் பயணி

துபாய் சாலை விபத்து

ஓமனில் இருந்து துபாய் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 12 இந்தியர்கள் உள்படப் 17 பேர் உயிரிழந்தனர். ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடச் சென்றவர்கள் பலர், இந்த விபத்தில் உயிரிழந்தனர்.  ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 31 பயணிகளை ஏற்றிக்கொண்டு துபாய் நோக்கி நேற்று முன்தினம் ஒரு பேருந்து சென்றது. மாலை  6 மணியளவில் அல் ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலையில் சென்றதே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. பேருந்தின் இடதுபுறம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் உயிரிழந்தனர். பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் இருந்துள்ளார்.

தடுப்பு கம்பம்

இந்த விபத்தில்,  சம்பவ இடத்தில் 15பேரும் மருத்துவமனையில் இரண்டும் பேரும் உயிரிழந்ததாக துபாய் போலீஸார் தெரிவித்துள்ளனர்.  பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலையில்  அனுமதிக்கப்பட்டதைவிட, அதிகமான வேகம் ஆகியவையே விபத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. விபத்தில்  உயிரிழந்த இந்தியர்களின் பட்டியலை துணை தூதரக அதிகாரிகள் வெளியிட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய தடுப்பு

''இந்தக் கோர விபத்தில் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிதின் லாஜி கூறுகையில், “இடது பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் இதில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களைப் பேருந்துக்குள் நாங்கள் மீட்க முயன்றோம். ஒரு பெண் காயத்தினால் கடுமையாகக் கூச்சலிட்டார். என்னிடம் உதவி கோரினார். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தில் அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். பேருந்து முழுவதும் ரத்தமும் சதையுமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்துக்கொண்டேன்'' என்றார்.

இந்த விபத்தில் உயிரிழந்த விக்ரம் தாக்கூர், தனது  மனைவி மனிஷாவுடன் ஓமன் செல்ல திட்டமிட்டுள்ளார். கடைசி நேரத்தில் அலுவலகப்பணியின் காரணமாக அவரால் வர இயலவில்லை. விக்ரம் தாக்கூர் தனது உறவினருடன் ஓமன் பயணமாகியுள்ளார்.  ஓமனில் இருந்து திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில், விக்ரம் தாக்கூர் மற்றும் அவரது உறவினர் ரோஷினியும் உயிரிழந்தனர்.  உறவினர்கள்மூலம் விபத்து குறித்து மனிஷாவுக்கு தெரியவந்துள்ளது.

விபத்து

இதுதொடர்பாகப் பேசிய மனிஷா, “ என் கணவர் இறந்ததை என்னால் நம்பமுடியவில்லை.  அவர் என்னிடம் மதியம்தான் பேசினார். திரும்பி வந்துகொண்டிருப்பதாக கூறினார்.  எனக்கு விபத்து குறித்து எதுவும் தெரியவில்லை. ரோஷினியின் சகோதரர் என்னைத் தொடர்புகொண்டபோதுதான் தெரியவந்தது. நான் உடனடியாக காவல் நிலையத்திற்கு போன் செய்து கேட்டேன். அவர்கள் எனது கணவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். நான் காவல் நிலையம் சென்றபோதுதான் ரோஷினி உயிரிழந்ததும் எனக்குத் தெரியவந்தது'' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கு உதவுவதற்காக சஞ்சீவ் குமார் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உதவிகள் தேவைப்படுவோர், +971- 504565441 என்ற எண்ணுக்கும் உதவிமையம் எண், +971- 565463903-க்கும் தொடர்புகொள்ளலாம்.