``95 பேர்... ஒரே இரவு... தீயிட்டு கொளுத்திக் கொன்ற கொடூரம்!’ - இனக்குழு மோதலில் வெடித்த பயங்கரம் #mali | At least 95 people killed and 19 missing after an overnight attack on Mali village

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (11/06/2019)

கடைசி தொடர்பு:18:48 (11/06/2019)

``95 பேர்... ஒரே இரவு... தீயிட்டு கொளுத்திக் கொன்ற கொடூரம்!’ - இனக்குழு மோதலில் வெடித்த பயங்கரம் #mali

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலியில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 95 பேர், ஒரே இரவில் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மாலி குடியரசு. இங்கு, 'தோகான்' என்ற வேட்டையாடும் இனத்தவர்களுக்கும்  'புலானி' என்ற பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் நிகழும். இதில் புலானி பிரிவினர், அல்கொய்தா அமைப்பினருடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுவதுண்டு. இதற்கிடையே, மத்திய மாலி பகுதியில் உள்ள சோபானே காவூ கிராமத்தைச் சேர்ந்த தோகான் இனத்தவர் 95 பேர், நேற்று முன்தினம் ஒரே இரவில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் உடலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சிலர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது மாலி அரசு. ``ஆயுதம் ஏந்தி வந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. 

அவர்கள், அமைதியான கிராமத்தின்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அழித்தொழித்துள்ளனர். அந்தக் கிராமத்தில், மொத்தம் 300 பேர் வரை இருந்துள்ளனர். இவர்களை ஒரே இடத்தில் வரவழைத்துக் கொன்று குவித்ததுடன், கொன்றவர்களின் உடல்களை மொத்தமாக தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஆடு, மாடுகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. கொள்ளையடித்த பின் வீடுகளையும் கொளுத்தியுள்ளனர். இன்னும் 19 பேரைக் காணவில்லை. இறந்த 95 பேரை எரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது" என்று மாலி அரசு தெரிவித்துள்ளது.

மாலி

இந்தத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய 'டோகோ' என்ற உள்ளூர்வாசி கூறுகையில், ``50 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் வந்தனர். முதலில் ஊரை சுற்றிவளைத்ததுடன் எங்களைத் தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயல்பவர்களை எல்லாம் கொலை செய்தனர். பயிர்கள், கால்நடைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் யாரும் காப்பாற்றப்படவில்லை. எல்லோரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்" என்றார். 

மாலியில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வன்முறையில் 160 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, சமீபகாலமாக மாலியில் இனக் குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்துவந்தது. இதற்கு பழிக்குப்பழி நடவடிக்கையாகவே புலானி அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு, நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க