`செல்போன் இல்லாமல் சாப்பிட்டால்...’ - பீட்சா உணவகத்தின் அசத்தும் ஆஃபர்! | US restaurant offers free pizzas for locking phones away while eating

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (11/06/2019)

கடைசி தொடர்பு:20:45 (11/06/2019)

`செல்போன் இல்லாமல் சாப்பிட்டால்...’ - பீட்சா உணவகத்தின் அசத்தும் ஆஃபர்!

பீட்சா

ரெஸ்டாரன்ட்டில் தொடங்கி தள்ளுவண்டிக் கடைவரை சாப்பிடும்போது, ஒரு கையில் சாப்பாட்டுத் தட்டை வைத்துக்கொண்டு, இன்னொரு கையில் செல்ஃபோனைப் பயன்படுத்தும் பலரைப் பார்த்திருக்கிறோம். இன்றைய சூழலில், செல்போன் நம்மை முழுவதுமாக  சுவீகரித்துக்கொண்டுவிட்டது. அதிலிருந்து விடுபட, கவுன்சலிங் தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். செல்போனில் வேலை இல்லை என்றாலும், அடிக்கடி அதை எடுத்துப் பார்ப்பது, தேவையற்ற நேரங்களில் வேண்டுமென்றே போனை எடுத்து பயன்படுத்துவதுமாக அதிலேயே கரைந்துபோகின்றோம்.

ஏழைகள்

செல்போன் நம்நாட்டுக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டது. இங்கே இப்படியிருக்க, அந்நாட்டில் செல்போன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதானியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருக்கும் உணவகம் ஒன்று, அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவர்களுக்கு பீட்சா ஒன்றை இலவசமாக வழங்குகிறது அந்த உணவகம். குறைந்தது நான்கு பேர் உணவகத்துக்குள் நுழையும்போது, அவர்கள் அங்கிருக்கும் லாக்கரில் போனை வைத்துவிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் வரை போனை கையால் தொடக்கூடாது.

சாலையோர ஏழைகள்

இப்படிச் செய்தால், வீட்டுக்குச் செல்லும்போதோ அல்லது அடுத்த முறை உணவகத்துக்கு வரும்போதோ, பீட்சா ஒன்று இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவகம் தரப்பில், ``குடும்பத்தினரோ நண்பர்களோ இணைந்து, எங்கள் ரெஸ்டாரன்ட்டுக்குள் நுழைந்தால், அவர்கள் சாப்பிடும்போது சொல்போனைப் பயன்படுத்தாமல் தங்களுக்குள் பேசிக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதேபோல, நாங்கள் மாதா மாதம் வீடில்லாமல் சாலைகளில் இருக்கும் ஏழைகளுக்கு பீட்சாவைக் கொடுத்து உதவிவருகிறோம். அப்படி உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச பீட்சாவை, நீங்கள் விரும்பினால் அவர்களுக்குக் கொடுத்து உதவலாம்” என்றனர்.