Published:Updated:

`ஒரே நிமிடத்தில் மாயமாகிவிட்டனர்’ -மியான்மர் சுரங்க விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை

மியான்மர் சுரங்க விபத்து
மியான்மர் சுரங்க விபத்து ( AP )

மியான்மர் நாட்டில், நேற்று நடந்த சுரங்க நிலசரிவு விபத்தில் சிக்கி இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மியான்மர், கச்சின் மாநிலம் ஹபாகந்த் பகுதியில் உள்ளது, ஜேட் (மாணிக்கக் கல்) சுரங்கம். இங்கு, நேற்று காலை வழக்கம்போல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கத்தில் இறங்கி மாணிக்கக் கல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென சுற்றியிருந்த நிலம் சரிந்து, சுரங்கத்தின் நடுவில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது.

மியான்மர் சுரங்க விபத்து
மியான்மர் சுரங்க விபத்து
AP

சுரங்கம் அமைந்துள்ள பகுதியில், ஏற்கெனவே கனமழை பெய்து நிலப்பரப்பு ஈரமாக இருந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், இந்த நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால், விபத்து நடந்து 12 மணிநேரத்துக்குள் அந்தச் சுரங்கத்திலிருந்து இதுவரை 162 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மியான்மர் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 54 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Vikatan

மியான்மர் சுரங்கத்தில் இதேபோன்ற விபத்துகள் நடப்பது தொடர்கதையாகிவருகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை சுரங்க உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

சுரங்க விபத்தை நேரில் பார்த்த 38 வயதான மாவுங் கைங் (Maung Khaing) என்ற தொழிலாளி 'ராயட்டர்ஸ்' ஊடகத்திடம் கூறும்போது, “ தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பெரும் சத்தம் கேட்டது. அனைவரும் ஓடு ஓடு எனக் கூச்சலிட்டனர். ஆனால், ஒரு நிமிடத்துக்குள் அனைவரும் மண்ணில் மறைந்துவிட்டனர். என் இதயம் காலியாக இருப்பதை உணரமுடிகிறது. என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து இன்னும் மீண்டுவர முடியவில்லை. சேற்றில் சிக்கிய மக்கள் உதவிக்காகக் கூச்சலிட்டனர். ஆனால், அவர்களை மீட்க யாரும் முன் வரவில்லை. மீட்கவும் முடியவில்லை” என வேதனையுடன் பேசியுள்ளார்.

மியான்மர் சுரங்க விபத்து
மியான்மர் சுரங்க விபத்து
AP

இந்த சுரங்கத்தில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றியுள்ளனர். அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகள் கிடைப்பது கடினம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு சேகரிக்கப்படும் மாணிக்கக் கற்கள், பெரும்பாலும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், ஒரு கல்லின் விலை பத்தாயிரம் டாலர்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு