ஒசாமா பின் லேடனை கொன்றது அமெரிக்க படை:ஒபாமா

இஸ்லாமாபாத்/ வாஷிங்டன், மே.2,2011

அல்-காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவரும், செப்டம்பர் 11 தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டவருமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமாவை, தனது உளவுப்படையின் சி.ஐ.ஏ. துணையுடன் அமெரிக்கப் படை கொன்றது. பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பான அறிவிப்பை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டார்.

பின்னர், பத்திரிகையாளர் தரப்பு பார்வையிட்ட பிறகு, ஒசாமாவின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒசாமா பின்லேடனுடன், அவருடைய மகன் உள்ப்ட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க படையினர் தனது உளவுப் படையின் துணையுடன் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில், ஒசாமா கொல்லப்பட்டார். அவரது உடலை அமெரிக்கப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தகவலை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அல்-காய்தா தலைவரும், ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று குவித்த பயங்கரவாதியுமான ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க மக்களுக்குத் தெரிவிக்கிறேன்.

அமெரிக்கப்படையின் சிறு குழு இந்த அசாதாரணமான தாக்குதலை மிகுந்த உத்வேகத்துடன் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கர்கள் தரப்பில் எவ்வித பாதிப்பும் இல்லை. சிவிலியன்கள் மரணம் ஏற்படாத வகையிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்," என்றார் பராக் ஒபாமா.

தாக்கியது எப்படி?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபோதாபாத்.

பாகிஸ்தான் ராணுவ அகாடெமிக்கு மிக அருகில் உள்ள இந்தப் பகுதியில் ஒசாமா பதுங்கியிருந்ததை சி.ஐ.ஏ. கண்டறிந்தது. இது உறுதி செய்யப்பட்டதும், ஒசாமா பதுங்கியுள்ள இடத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த வாரம் உத்தரவிட்டார்.

சுமார் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள கட்டடத்தில் பின் லேடன் பதுங்கியிருந்துள்ளார். அதன் மீது அமெரிக்க படையினர் சுமார் 40 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்காக கடந்த சில மாதங்களாக அமெரிக்க படையினர் ஒத்திகை பார்த்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் ஒசாமா பதுங்கியிருந்த தகவல், உளவு அமைப்பு மூலம் தெரியவந்ததும், கடந்த ஆகஸ்ட் மாதமே தனது வேட்டையை அமெரிக்கப் படையினர் துவங்கியிருக்கின்றனர்.

கடுமையான சண்டைக்குப் பிறகே, ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை அமெரிக்கப் படையினர் கைப்பற்றியதாகவும் கூறிய ஒபாமா, "நீதி நிலைநாட்டப்பட்டது," என்று முழங்கினார்!

அமெரிக்க மக்கள் கொண்டாட்டம்...

ஒசாமா கொல்லப்பட்ட தகவல் வெளியானவுடன், வெள்ளை மாளிகை முன்பு குழுமிய அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி ஆர்வாரம் செய்தனர்.

நாடு முழுவதும் பல இடங்களிலும் ஆங்காங்கே கூடிய மக்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அமெரிக்கா முழுவதுமே மக்களின் கொண்டாட்டம் தொடர்ந்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் 11-ல் நியூயார்க்கின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத என்ற வகையில், அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா முன்னெச்சரிக்கை...

ஒசாமா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிராக வன்முறை நடைபெறலாம் என்று வெள்ளை மாளிகை கருதுகிறது. இதனால் வெளிநாட்டில் வாழும் அமெரிக்க மக்களும், உலகம் முழுவதும் செல்லும் அமெரிக்கர்களுக்கும் கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கர்கள் மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!