வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (11/12/2013)

கடைசி தொடர்பு:17:41 (11/12/2013)

காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிய ஒபாமாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

வாஷிங்டன்: மண்டேலா இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டதில் இருந்து ஒபாமாவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

1961ஆம் ஆண்டு ரஷ்யாவுடன், அமெரிக்கா அரசியல் உறவை வலுப்படுத்திக்கொண்டதால், அந்நாடு கியூபாவுடனான அரசியல் உறவை முழுமையாக துண்டித்துக் கொண்டது. இதனால் இந்த இரண்டு நாட்டு தலைவர்களும் பொது விழாவில் கைகுலுக்கிக் கொள்வது கிடையாத. ஆனால், நேற்று நடந்த மண்டேலா இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டதோடு, தங்களது செல்போனிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஒபாமாவின் இந்த செயலுக்கு அமெரிக்க பத்திரிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்க குடியரசு கட்சி, அதிபர் ஒபாமாவுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சுதந்திர தேசத்தின் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரியாக விளங்கும் இன்னொருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்கதல்ல என அதில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகையின் உதவியாளர் பென் ரோட்ஸ், மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா கைகுலுக்கியது திட்டமிட்ட செயல் அல்ல என்றும், இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்களே தவிர, இதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்றும், இதுபோன்று பொது நிகழ்ச்சிகளில் அதிபர்கள் கைகுலுக்கிகொள்வது இயல்புதான், இதேபோல் கடந்த 2000ஆம் ஆண்டு கடந்த ஐ.நா. சபை கூட்டத்தின்போது முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன், கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், கியூபாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா, எப்போதும் கவலை கொண்டு வருவதாகவும், அதை தடுக்க பலவிதமான முயற்சிகள் எடுத்துவருவதாகவும் கூறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கியூபா அதிபர் தரப்பினரோ, இரண்டு எதிரெதிரான நாட்டின் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டது, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவதாக அமையும் என்று கூறியுள்ளனர்.

சி.ஆனந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்