Published:Updated:

கொரோனா: `நிமிடத்துக்கு 43 பேர்; மணிக்கு 2,600 பேர்!’ - பாதிப்பால் திணறும் அமெரிக்கா

அமெரிக்கா
அமெரிக்கா

`` அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை அடைய சுமார் 98 நாள்கள் ஆனது. அதிலிருந்து இரண்டு மில்லியனாக பாதிப்பு எண்ணிக்கை உயர சுமார் 43 நாள்களே ஆனது.”

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதன்மையானது. அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் அலட்சியம் காரணமாக இவ்வளவு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என சுகாதார நிபுணர்கள் உட்பட பலரும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதன் உச்சத்தை அடைந்து வந்தது. எனினும், முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி போன்ற வழிமுறைகளை அதிபர் ட்ரம்ப் கட்டாயமாக்காமல் இருந்து வருகிறார். இதுதொடர்பான விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி உறுதியானது. இதையடுத்து படிப்படியாக அதிகமாகி பாதிப்படைந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில்தான் இருந்து வருகிறது. அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை அடைய சுமார் 98 நாள்கள் ஆன நிலையில், அதிலிருந்து இரண்டு மில்லியனாகப் பாதிப்பு எண்ணிக்கை உயர சுமார் 43 நாள்களே ஆகின. இதையடுத்து, சுமார் 27 நாள்களில் 3 மில்லியன் பாதிப்பு எண்ணிக்கையை அமெரிக்கா அடைந்தது. இந்த நிலையில், நிமிடத்துக்கு 43 பேர் பாதிப்பு என 4 மில்லியன் எண்ணிக்கையை அடைய சுமார் 16 நாள்கள் மட்டுமே ஆகின. அதாவது, அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 2,600 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வருகின்றனர்.

அமெரிக்கா:`ஒரே நாளில் 50,000 பாதிப்புகள்; மாஸ்க் கட்டாயமில்லை’ -நிபுணர்கள் வேதனை

மக்களிடையே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய மற்றும் மாகாண ஆட்சியாளர்கள் கடுமையாக மோதி வந்தனர். பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதில் அதிபர் ட்ரம்ப் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனால், மக்களிடையே பல்வேறு விஷயங்கள் குறித்தும் குழப்பமான ஒரு மனநிலையே நிலவி வந்தது எனலாம். ஒருபுறம் குழப்பமான சூழ்நிலை மறுபுறம் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு என அமெரிக்கா திணறி வந்தது. இதனிடையே ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டது தொடர்பான போராட்டங்களும் தீவிரமடைந்தது. இதனால், ஆட்சியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் வைரஸ் பரவல் தொடர்பான அச்சங்களை வெளிப்படுத்தி வந்தனர். எனினும், கடுமையான நடவடிக்கைகளை மக்களிடம் திணிக்க விரும்பவில்லை என்று கூறிய ட்ரம்ப் தானும் முகக்கவசம் அணியாமல் இருந்து வந்தார். கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு முகக்கவசம் அணிந்தார். மக்களையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தினார். இந்த முகக்கவசத்தை வைத்து அமெரிக்காவில் அரசியலே நடந்தது எனலாம்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

உலகளவில் பல நாடுகளில் வைரஸ் பாதிப்புகள் குறைந்து வந்தாலும் அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையிலும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. அமெரிக்காவில் 1.43 லட்சம் மக்கள் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். பிரேசிலில் சுமார் 83,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பில் இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு பாதிப்படைந்துள்ளனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கைகளும் இந்தியாவில் அதிகமாகி வருகிறது.

`கொரோனா, வெல்ல முடியாத எதிரி; ஆனால், அமெரிக்கா அதை தோற்கடிக்கும்!’ - ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு