தாலிபான் தலைவர் முல்லாவை நாடு கடத்த ஆப்கானுக்கு, பாகிஸ்தான் வலியுறுத்தல்!

காபூல்: தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா பஸ்லுல்லாவை நாடு கடத்துங்கள் என்று ஆப்கானிஸ்தான் அரசை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாத இயக்கத்துக்கு தலைவராக செயல்பட்டு வந்த ஹக்கிமுல்லா மெசூத்,  கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த இயக்க தலைவராக முல்லா பஸ்லுல்லா தேர்வு செய்யப்பட்டார். முல்லா பஸ்லுல்லா பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்திவிட்டு தற்போது ஆப்கானிஸ்தானில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கராச்சி விமான நிலையத்தில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் ஐஜாஸ் அகமது சவுத்ரி, பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு தூதர் மக்மூத் கான் அசக் ஷாய் ஆகியோர் அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளனர். அங்கு அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்த இந்த குழுவினர், தாலிபான் தலைவர் முல்லா பஸ்லுல்லாவை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

முல்லா பஸ்லுல்லா மற்றும் பாகிஸ்தான் தாலிபான் இயக்க தீவிரவாதிகள் பலர் ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பு ஆதரவுடன் அங்கு சுதந்திரமாக சுற்றி வருவதற்கான ஆதாரங்களை, ஹமீது கர்சாயிடம் இந்த குழு ஒப்படைத்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஹமீது கர்சாயிடம் வேண்டுகோள் விடுத்த அவர்கள், அதன்படி இந்த தீவிரவாதிகளை உடனே பிடித்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!