வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (06/10/2014)

கடைசி தொடர்பு:19:14 (06/10/2014)

மங்கள்யான் வெற்றி: அமெரிக்க பத்திரிகையில் வயிற்றெரிச்சல் கார்ட்டூன்!

நியூயார்க்: இந்தியாவின் மங்கள்யான் சாதனையை பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலில் இந்தியாவை இழிவுபடுத்தும்விதமாக கார்ட்டூன் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் முதல்முயற்சியிலேயே வெற்றிகரமாக சென்றடைந்தது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. பல நாடுகள், நான்கைந்து முறைக்கும் அதிகமான முயற்சிகளுக்குப் பின்னரே இந்த வெற்றியை எட்ட முடிந்தது. அதுவும் மங்கள்யானுக்கு இந்தியா செலவழித்த தொகையைக் காட்டிலும் மிக அதிகமான தொகையை இந்த நாடுகள் செலவழித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் இந்த சாதனையை சில மேற்குலக நாடுகள் வயிற்றெரிச்சலுடன் பார்க்கின்றன. செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி என்பது ஏதோ தங்களால் மட்டுமே முடியக்கூடிய காரியம், தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது போன்ற எண்ணத்தை இவை கொண்டுள்ளன.

ஆனால் அந்த எண்ணத்தை இந்திய விஞ்ஞானிகள் அடித்து நொறுக்கிவிட்டதால், தங்கள் ஆற்றாமையை பல வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றன இந்த நாடுகள். அதன் ஒரு அம்சமாக அமெரிக்காவுன் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் இந்தியாவை இழிவுபடுத்தும் விதமான இன துவேஷ கார்ட்டூன் ஒன்று வெளியாகி இருந்தது.

'விண்வெளி மேதைகள் கிளப்'பின் வாசலில், கையில் பசு மாட்டை பிடித்தபடி வேட்டி தலைப்பாகை அணிந்த இந்தியர் ஒருவர் கதவை தட்டிக்கொண்டிருப்பதை போன்று அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட இந்த கார்ட்டூன் இன துவேஷமுடையது என சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவின் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் இதுபோன்ற அவமதிப்பு செயலில் ஈடுபடுவதாக பலர் குற்றம் சாட்டியிருந்தனர். 'நியூயார்க் டைம்ஸ்' வாசகர்களிடத்திலும் இந்த கார்ட்டூனுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து அந்த கார்ட்டூனுக்காக 'நியூயார்க் டைம்ஸ்' தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது. அந்த கார்ட்டூனை வரைந்த ஹெங் கிம் சாங், இந்தியாவையோ அல்லது இந்திய குடிமக்களையோ அல்லது இந்திய அரசையோ குறைத்து மதிப்பிடும் நோக்கில் வரையவில்லை என்றும், வாசகர்கள் இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை வரவேற்று பாராட்டுவதாகவும் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் தலையங்க பக்க ஆசிரியர் ஆன்ட்ரூ ரோசெந்தல் கூறியுள்ளார்.

இந்த கார்ட்டூனை வரைந்த ஹெங் கிம் சாங் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்பதும், சர்வதேச விவகாரங்களில் இவர் அடிக்கடி இதுபோன்ற ஆத்திரமூட்டும் வகையிலான சர்ச்சை கார்ட்டூன்களை வரைபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்