அமெரிக்காவில் இந்தியருக்கு மரண தண்டனை!

நியூ யார்க்: அமெரிக்காவில் 10 மாத குழந்தையையும், பாட்டியையும் கொன்ற இந்திய வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

இந்தியாவைச் சேர்ந்த  ரகுநாதன் யண்டமூரி(28) என்பவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

பணம் வைத்து  சூதாடும் பழக்கத்துக்கு தீவிர அடிமையாகிவிட்ட அவரால், தனது வருமானத்தை வைத்து அமெரிக்காவில் காலம் தள்ள  முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியரின் வீட்டில் இருந்து 10 மாத கைக்குழந்தையைக்  கடத்திச் சென்றார்.பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

கைக்குழந்தையான தனது பேத்தியை மிரட்டல் விடுத்த நபரிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார் அக்குழந்தையின் பாட்டி  சத்யவதி வென்னா(61) . அப்போது நடந்த போராட்டத்தில்,   அந்த பெண்மணியைக்  கத்தியால் குத்திக் கொன்ற ரகுநாதன் யண்டமூரி, அந்தக் குழந்தையையும் கழுத்தை நெரித்துக்  கொலை செய்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் கொலையாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தது.  இது தொடர்பாக  நடைபெற்ற வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க 7 பெண்கள் உள்பட 12 நபர்கள் அடங்கிய நீதிமன்ற நடுவர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த தண்டனையை எப்போது நிறைவேற்றுவது என்பதற்கான உத்தரவை, இன்னும் 45 நாட்களில் நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!