வாகா எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல்: 52 பேர் பலி!

வாகா: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா அருகே,  பாகிஸ்தான் பகுதியில் இன்று மாலை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 52 பேர் பலியாகியுள்ளனர்; 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

வாகனம் நிறுத்துமிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.இதில் குழந்தைகள்,ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலர் பலியாகி உள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக லாகூர் மற்றும் பல அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகள் அனைத்திலும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணி அளவில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் வழக்கமாக நடைபெறும் இரு நாட்டு படை வீரர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு, மக்கள் திரும்பிக்கொண்டிருக்கும்போது இந்த தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதல் நடந்த இடத்தில் ஆங்காங்கே குண்டுகளில் வைக்கப்பட்டிருந்த பால்பேரிங்குகளின் சிதறல்கள் கிடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்வையிட்ட லாகூர் காவல்துறை தலைவர் அமின் தெரிவித்தார்.

மேலும் நடந்தது தற்கொலை தாக்குதல்தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறை தலைவர் முஷ்டாக் சுகேரா, வாகா எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி அருகே உள்ள ஓட்டலுக்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறினார்.

இந்நிலையில் நடந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஜன்டுல்லா என்ற தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதனிடையே  சம்பவ இடத்திலிருந்து பத்திரிகையாளர்களை வெளியேற உத்தரவிட்ட ராணுவ அதிகாரிகள், அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்கும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!