பல பெண்களை ராஜபக்சே மகன்கள் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார்!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது.
 

இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது.

இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து ஜாதிக ஹெல உறுமய என்னும் புத்தமத அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் ராஜபக்சே, தலைமையிலான நீலப்படை அணி நாட்டில் மாற்றுப்படையாக செயல்பட்டது. நீலப்படை அணியின் செயல்பாடுகள் தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ராஜபக்சே மகன்களால் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம், துன்புறுத்துதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளன. இவர்களின் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான இளம் பெண்களுக்கு பல்வேறு அரசு பதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ராஜபக்சேயின் மகன்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து நாங்கள் பல தகவல்களை திரட்டி வரும் அதே நேரத்தில் இன்னும் கூடுதல் தகவல்களை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!