அதிபர் மாளிகையில் ராணுவ புரட்சிக்கு சதி நடந்ததா? கோத்தபய விளக்கம்! | Sri Lankan military revolution, Gotabhaya,

வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (22/01/2015)

கடைசி தொடர்பு:16:21 (22/01/2015)

அதிபர் மாளிகையில் ராணுவ புரட்சிக்கு சதி நடந்ததா? கோத்தபய விளக்கம்!

கொழும்பு: இலங்கையில் ராணுவ  புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னரே ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி விட்டார். எனவே ராணுவப் புரட்சி விடயத்தில் அதிபர் மாளிகையில் ரகசிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறப்படுவது அடிப்படையற்ற கருத்து.

தேர்தல் முடிவை அடுத்து, காலையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அதிபர் மாளிகைக்குச் சென்றேன். அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.  அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையும் பெறப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. தாம் உடனடியாக அதிபர் மாளிகைக்கு வருவதாக அவர் கூறினார். அவர் அங்கு வந்ததும், அதிபருடன் கலந்துரையாடினார். அதையடுத்து அதிபர் மாளிகையை விட்டு ராஜபக்சே வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டது.

ராஜபக்சே, மற்றவரின் பாதுகாப்புக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். இதுதான் தேர்தல் இறுதி முடிவு வெளியாவதற்கு முன்னர் நடந்தது. நாம் ராணுவ  புரட்சிக்குத் திட்டமிட்டிருந்தால் எதற்காக, அரசு தலைமை வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அவர் அரசாங்கத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குபவர் " என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்