Published:Updated:

மைனஸ் 25 டிகிரில் குளிரூட்டப்பட்ட வாகனம்; 39 சடலங்கள் - தீவிரம் காட்டும் இங்கிலாந்து போலீஸ்!

கன்டெய்னர் விவகாரத்தில் இதற்குப் பின்னால் இருக்கும் கும்பலைப் பிடிப்பதற்கு போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

 Container
Container

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் கன்டெய்னர் லாரியிலிருந்து 39 சடங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த கன்டெய்னரில் 8 பெண்கள் மற்றும் 31 ஆண்கள் சடலமாக மீட்கப்பட்டனர். காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் லாரி கன்டெய்னரில் சடலமாக இருந்தவர்கள் சீனர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அயர்லாந்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராபின்சனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை இந்த விவகாரத்தில் போலீஸார் எந்த முடிவுக்கும் வரவில்லை. 39 பேரின் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது. இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேற வந்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு இருக்கிறது.

 Container
Container

கன்டெய்னரில் சடலங்கள் கண்டெடுக்கப்படுவது இதுமுதல் முறையல்ல. 2000-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்ட விரோதமாக குடியேற வந்த சீனர்கள் இதுபோல் கன்டெய்னரில் அழைத்து வரப்பட்டனர். டோவர் துறைமுகத்துக்குப் பின் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரிலிருந்து 58 சீனர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தல்காரர்களுக்கு 26,000 டாலர் கொடுத்து இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேற அவர்கள் முற்பட்டது தெரியவந்தது. முழுவதுமாக அடைக்கப்பட்ட கன்டெய்னரில் நீண்ட நேரம் பயணித்ததே மரணத்துக்கான காரணம் எனக் கூறப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்த விவாகரத்தில் சிறிய மீன்களே சிக்குகின்றனர். ஆனால், இந்த கன்டெய்னர் விவகாரத்தில் இதற்குப் பின்னால் இருக்கும் கும்பலைப் பிடிப்பதற்கு போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

`மாணவியின் ஆடையை வைத்தே அவளை எரித்தனர்!' - வங்கதேசத்தை உலுக்கிய வழக்கில் 16 பேருக்கு தூக்கு

இந்த கன்டெய்னர் வாகனம் பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணின் பெயரில் பதிவாகியுள்ளது. ஆனால், கன்டெய்னர் பதிவான அடுத்த நாளே பல்கேரியாவிலிருந்து வெளியேறிவிட்டது. அதன்பின் கன்டெய்னர் பல்கேரியாவுக்குத் திரும்பவில்லை. பல்கேரியாவில் இருக்கும் சட்டவிரோதக் கும்பல் இந்த சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் என சந்தேகம் வலுத்துள்ளது. அந்த கன்டெய்னர் மைனஸ் 25 டிகிரில் குளிரூட்டப்பட்டிருந்தது. ராபின்சன் தனது லாரியை டப்ளினில் இருந்து வேல்ஸ் பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த வாகனத்தில் கன்டெய்னர் சேர்க்கப்படவில்லை. அக்டோபர் 19-ம் தேதி ஹோலிஹெட் பகுதியை அடைந்துள்ளது. கன்டெய்னரை ஏற்றிக்கொள்வதற்கு நான்கு நாள்களுக்கு முன்னரே ராபின்சன் லாரியுடன் ஏன் அங்கு வந்தார் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

 Container
Container

இந்த மரணத்துக்கும் ராபின்சனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்திலிருந்து லாரியை எடுத்து வந்தவர் சில ஆவணங்களை எடுப்பதற்காக கன்டெய்னரை திறந்துள்ளார். அப்போது அதற்குள் இருந்த உடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தெரிவித்ததையடுத்துதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கன்டெய்னரில் சடலங்கள் இருப்பது குறித்து யார் தகவல் தெரிவித்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. ராபின்சன் கைது தொடர்பாக தகவல்கள் தெரியவந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து விரைந்துள்ளனர்.