கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள்)

யாழ்ப்பாணம்: வடக்கு மாகாண சபை சார்பில் முள்ளிவாய்க்காலில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
 

முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்தவிதமான நிகழ்வுகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவொன்றை மேற்கோள் காட்டி, முல்லைத்தீவு காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை காரணமாக, இப்படியான நிகழ்வுகள் இன்று நடைபெறுமா என்பது குறித்து குழப்பமானதொரு நிலை நிலவியது.

ஆனால் முள்ளிவாய்க்கால் பகுதியில் திங்களன்று இலங்கை காவல்துறையினர் காணப்பட்ட போதிலும் அங்கே நடந்த அஞ்சலி நிகழ்விற்கு எந்தவித இடையூறும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வு ஒன்று இடம்பெறாத வகையில் முந்தைய அரசால் கடுமையான தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த பின்னணியில், முதற் தடவையாக முள்ளிவாய்க்காலில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.



 

முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் பாடசாலை மைதானத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதான தீபத்தை ஏற்றி மலர்கள் தூவி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரும் பிரதி அமைச்சருமாகிய விஜகலா மகேஸ்வரனும், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மௌனமாக தீபமேற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள், சுடர்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபவித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.

அப்போது பேசிய, விக்னேஸ்வரன், தற்போது நாட்டில் தோன்றியுள்ள சாதகமான அரசியல் நிலைமை மாற்றமடைவதற்கு முன்னர், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் அனைவரும் விரைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

விரைந்து செயற்படாமையும், கால நீடிப்பும், பிரச்னைகளினதும், அவற்றுக்கான தீர்வுகளினதும் பரிமாணங்களை மாற்றி அமைக்கும் அபாயத்தைக் கருத்திற் கொண்டு செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடனும், சர்வதேச சமூகத்துடனும் இணைந்து தமிழ்த்தேசியத்தின் அரசியல் அபிலாசைகளைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்கின்ற இந்த சோகமயமான தினத்தில் இத்தகைய நடவடிக்கையே இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர கௌரவத்துடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க உதவும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
 

இதனிடையே  கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட பாதிரியார் சரத் ஜீவன் நினைவாக கட்டப்பட்ட பள்ளியில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளிக்  குழந்தைகள் பங்கேற்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!