அணு ஆயுதங்களை நோக்கி ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் : உலக நாடுகள் அச்சம்!

லண்டன்: பாகிஸ்தானிடம் இருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம் என ஐ.எஸ். அமைப்பினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் இதழ்  "டபிக்"கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐ.எஸ். அமைப்பினர், தங்கள் அமைப்பு மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த நவீன யுகத்தில் மிகத்தீவிரமான குழுவாகத் தொடங்கப்பட்ட ஐ.எஸ். அமைப்பு,  இன்று மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளதாக அந்த இயக்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டன் ஜான் காண்ட்லி கூறியுள்ளார்.

நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாதிகள், ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் அமைப்புகளை உள்ளடக்கிய பேரியக்கமாக ஐ.எஸ். உருவாகியுள்ளதாகவும் அந்த இதழில் திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

தற்போது தங்களிடம் மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி கையிருப்பு உள்ளதால், விரைவில் லஞ்சம் லாவண்யத்தில் திளைக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஆயுத தரகர்கள் உதவியுடன் அந்நாட்டிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்க உள்ளதாகவும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. இதனால் ஐ.எஸ். அமைப்பினரின் போர் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.  

உலக நாடுகள் அதிர்ச்சி

மேலும் அப்படி அணு ஆயுதங்கள் தங்களுக்கு கிடைத்துவிட்டால் அதனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்போவதாகவும்  ஐ.எஸ். இயக்க தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அமெரிக்கா என்று சொல்லும் ஐ.எஸ். இயக்கம், நாளை தங்களது ஹிட் லிஸ்டில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் இதே மிரட்டலை விடுக்கும் சாத்தியம் உள்ளதால், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

இருப்பினும் அணு ஆயுதங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றுவிடக் கூடிய அளவுக்கு பாகிஸ்தான் அரசு நடந்துகொள்ளாது என்ற நம்பிக்கையும் அமெரிக்காவிடம் உள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!