வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (25/05/2015)

கடைசி தொடர்பு:17:39 (25/05/2015)

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 65 வயது பெண்மணி!

பெர்லின்: ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்று மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் 65 வயதான  ஜெர்மன் நாட்டுப் பெண்மணி.

ஜெர்மன் தலைநகர் பெர்லினைச்  சேர்ந்தவர் அன்னீகிரட் ரவுனிக். 65 வயதான இவர்,  அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி பயிற்சி அளிக்கும் ஆசிரியராக உள்ளார். 65 வயது மூதாட்டியாக இருந்தாலும்  அண்மையில்  கர்ப்பம் தரித்து இருந்தார்.

ஏற்கெனவே இவருக்கு 13 பிள்ளைகளும், 7 பேரக்குழந்தைகளும் உள்ளனர். 13 குழந்தைகளும் 5 வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள் ஆவர்.  மூத்த பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, அவர்களுக்கு குழந்தையும் உள்ளது. ரவுனிங்கிற்கு பேரக் குழந்தைகளும் உள்ளது. அவரது கடைசி மகளின் வயது 9 ஆகும்.   இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்று இருந்த அன்னீகிரட்டுக்கு சமீபத்தில் ஒரே பிரசவத்தில் 3 ஆண், 1 பெண் என 4 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

ரவுனிக் 21 வது வாரம் கர்ப்பிணியாக இருந்தபோதே  மருத்துவ பரிசோதனையில் அவருடைய வயிற்றில் 4 குழந்தைகள் வளருவது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் 4 இதயங்கள் துடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்னீகிரெட் கருவுற்று வெறும் 26 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குறை பிரசவம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை எனவும் பெர்லினில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ள நிலையில் தான் மீண்டும் கருவுற்று இருப்பதை கடந்த மாதம் அன்னீகிரெட் அறிவித்தார். இது தொடர்பாக அப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஆனாலும் அவரை சரியாகப் பராமரித்து 4 குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவிய மருத்துவர் குழு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளது .

65 வயதிலும் தாயாக முடியும் என்று நிரூபித்த அன்னீ கிரேட்டுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை