கடும் வெள்ளத்தால் காப்பகத்தில் இருந்து தப்பிய சிங்கம் புலிகள்: வீடுகளில் மக்கள் முடக்கம்!

டிபிலிஸி: தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் காப்பகத்தில் இருந்து புலி, சிங்கம் உள்ளிட்ட அபாயகரமான விலங்குகள் தப்பி மக்களின் குடியிருப்பு பகுதிகளில் உலவுவதால் ஜார்ஜியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் சில நாட்களாகத்  தொடர்மழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் தலைநகர் டிபிலிஸியில் உள்ள வெரே ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ள நிலையில், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர், அப்பகுதியில் இருக்கும் வனவிலங்கு காப்பக வேலிகளையும் அறுத்தெறிந்துள்ளது. இதையடுத்து, காப்பகத்தில் இருந்த சிங்கம், புலி, கரடி, நீர்யானை, காண்டா மிருகம், முதலை போன்ற ஆபத்தான உயிரினங்கள் நேற்றிரவு ஊருக்குள் புகுந்துள்ளன.

இவற்றில் சில கரடிகளையும், நீர் யானைகளையும் வனவிலங்கு காப்பக ஊழியர்கள் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். எனினும்,  சிங்கம், புலி போன்ற பயங்கர விலங்குகளையும் பிடிக்கும்வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!