Published:Updated:

`நிறவெறிக்குப் பலியான 5 வயதுச் சிறுவன்?!’ பிரேசிலையும் அசைத்த #BlackLivesMatter போராட்டம்

பிரேசில் போராட்டம்
பிரேசில் போராட்டம்

``எனது முதலாளி அவரது குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள சொல்லி என்னிடம் தருவார். நான் என்னுடைய மகனை ஒரே ஒருமுறை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால், அவனைப் பார்த்துக்கொள்வதற்கான பொறுமை அவருக்கு இல்லை.”

அமெரிக்காவில், ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிக போராட்டங்களைத் தூண்டியது. பல தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிறவெறியால் ஜார்ஜ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சியிலிருந்து மக்கள் பலரும் இன்னும் வெளியே வராத நிலையில், பிரேசிலில் இதேபோல நிறவெறி காரணத்தால் 5 வயதுச் சிறுவன் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது `ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்’ போராட்டத்தை நூற்றுக்கணக்கான பிரேசில் மக்கள் கையில் எடுத்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்
RT

பிரேசிலில் உள்ள ரெசிஃப் எனும் நகரில் மரணமடைந்த சிறுவனின் தயான மிர்டெஸ் ரெனட்டா ஸூசா பணிபுரிந்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தன்னுடைய மகனைக் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னுடன் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டு உரிமையாளர் அறிவுறுத்தலால், அவருடைய நாயை நடைப்பயணத்துக்கு மிர்டெஸ் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தனது ஐந்து வயது மகனான மிகுவெல் டா சில்வாவை வெள்ளையின பெண்ணான உரிமையாளரின் பராமரிப்பில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். சிறுவன் தனது தாயுடன் செல்ல விரும்பியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் படி, சிறுவன், தனது தாய் பணிபுரிந்து வரும் வீட்டின் உரிமையாளருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, அந்தச் சிறுவன் சர்வீஸ் எலிவேட்டர் ஒன்றின் உள் நின்றுள்ளார். இதையடுத்து, அவர் எலிவேட்டரில் உள்ள பொத்தானை அழுத்தி விடுகிறார். எலிவேட்டரில் சிறிவன் தனியாகச் சென்றுள்ளார். எலிவேட்டர் தரை தளத்துக்குச் செல்வதற்குப் பதிலாக மேல் தளத்துக்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து வெளியேறிய சிறுவன் பால்கனியில் உள்ள வேலியைத் தாண்டி தவறி கீழே விழுந்து இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikatan

மிர்டெஸ் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரின் அலட்சியமும் அவரின் பாகுபாடும்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. நிறவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனத்தால் இறந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டம், பிரேசிலிலும் மக்கள் போராட வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ``ப்ளாக் லிவ்ஸ் மேட்டர் போராட்டத்தில் கலந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், பல வீடுகளில் வேலை செய்யும்ஆப்பிரிக்க-பிரேசிலியர்களின் குழந்தைகள் அனுபவிக்கும் கஷ்டங்களை சில்வாவின் வாழ்க்கை எடுத்துரைக்கிறது” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசங்கள் அணிந்தும் சிறுவனின் புகைப்படங்களைக் கைகளில் ஏந்தியும் போராட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிறுவன் விழுந்து இறந்த கட்டடத்துக்கு அணிவகுத்துச் சென்று தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து பேசிய மிர்டெஸ், ``எனது முதலாளி அவரது குழந்தைகளை கவனித்துக்கொள்ளச் சொல்லி என்னிடம் தருவார். நான் என்னுடைய மகனை ஒரே ஒருமுறை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால், அவனைப் பார்த்துக்கொள்வதற்கான பொறுமை அவருக்கு இல்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார். மிர்டெஸுக்கு சில்வா ஒரே மகன்.

போராட்டம்
போராட்டம்
RT

``இந்தச் சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்காமல் விடப்படும் என நாங்கள் கவலைப்படுகிறோம். நீதி வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்” என ஆப்பிரிக்க-பிரேசில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மோனிகா ஆலிவெய்ரா கூறியுள்ளார். அமெரிக்காவைப் போலவே பிரேசில் நாட்டிலும் இனப் பிரச்னைகள் அதிகமாக உள்ளன. பிரேசில் மக்கள் தொகையில் 56 சதவிகித மக்கள் ஆப்பிரிக்கப் பின்புலத்தைக் கொண்டவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்கள் வெள்ளையின மக்களால் அதிகமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதுவரை அங்கு 6.50 லட்சம் மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 35,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் உரிய நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். எனினும், தற்போது வரை அவர் அலட்சியமாகவே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தற்போது கறுப்பின மக்கள் கையில் எடுத்திருக்கும் போராட்டம் தீவிரமடைந்தால் பாதிப்பு பிரேசிலில் மிகவும் கடுமையாக இருக்கும் என்கின்றனர்.

`200 ஆண்டுக்கால பிரச்னை, ட்ரம்புடன் முடியாது!' -ஜார்ஜின் மரணம் குறித்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்
அடுத்த கட்டுரைக்கு