வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (08/09/2015)

கடைசி தொடர்பு:15:23 (09/09/2015)

சிரியா அகதிகளுக்காக தீவையே விலைக்கு வாங்கும் தொழிலதிபர்!

கெய்ரோ: சிரியாவிலிருந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வரும் மக்களின் தேவைக்காக, ஒரு தீவையே விலைக்கு வாங்க எகிப்து நாட்டின் தொழிலதிபர் நகுய்ப் சாகுரிஸ்  முன்வந்துள்ளார். அந்த தீவிற்கு கடலில் மூழ்கி உயிரிழந்த சிரியா நாட்டின் சிறுவன் அய்லன் பெயரைச் சூட்டவும் அவர் முடிவுசெய்துள்ளார். 

துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்களும் உலகையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைத் தளங்களில் பலர், தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தொடர்ந்து  வெளிப்படுத்தி  வருகின்றனர்.

சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கொடூரமாகச் சிதைத்துப் போட்டுள்ளது.  அவர்களில் பலரும், தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கொபானி நகரில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு துருக்கிக்குச்  சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு, ஐரோப்பிய நாடுகளுக்குச்  செல்கின்றனர்.

அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு 2 படகுகளில் 23 அகதிகள் சென்றனர். ஆனால் அந்த படகுகள், துருக்கியில் பொத்ரும் நகருக்கு அருகே கவிழ்ந்து விட்டன. அவற்றில் 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் நடுக்கடலில் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பச்சிளங் குழந்தைகள். அதில் ஒருவன்தான் துருக்கியின் கோஸ் தீவில் சடலமாக கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லான்.

இந்நிலையில் அல்லல்படும் அகதிகளுக்காக ஒரு குட்டி தீவையே விலைக்க வாங்க முன் வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடீஸ்வரர். தான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கித்  தரவும் முடிவு செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல். இதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவுக்கு பலியான சிரியா சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக நகுய்ப் சாகுரிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்,
 
அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு, சமீபத்தில் அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லான் தீவு’ என பெயரிட முடிவு செய்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து நாட்டில் பிரபல தொலைத் தொடர்பு நிறுவன அதிபராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அகதிகளாக வரும் மக்களுக்கு நாங்கள் இடம் தருகிறோம் என ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்