பின்லேடன் என நினைத்து சீக்கியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய அமெரிக்கர்!

நியூயார்க்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் தீவிரவாதி பின்லேடன் என்று நினைத்து, வயதான சீக்கியரை மர்ம நபர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில், இந்தர்ஜித் சிங் முக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8ஆம் தேதி, தனது காரில் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது காரை பின் தொடர்ந்த நபர், இந்தர்ஜித் காரை ஓட்டவிடாமல் இடையூறு செய்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இந்தர்ஜித் காரை நிறுத்திவிட்டு, அந்த மர்ம நபர் செல்வதற்கு வழிவிட்டிருக்கிறார். ஆனால், அவரோ காரில் இருந்து இறங்கி வேகமாக இந்தர்ஜித்தை நோக்கி ஓடிவந்து, அவரை காரில் இருந்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இந்தர்ஜித்தின் தாடை கிழிந்தது. அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தர்ஜித்சிங் முக்கர் கூறுகையில், "அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளையில், இத்தகைய வெறுப்பு பிரசாரங்களை அமெரிக்க அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்னை தாக்கிய நபர் "நீ ஒரு தீவிரவாதி... பின்லேடனே உன் நாட்டுக்கு திரும்பச் செல்!" எனக் கூறினார்.

அமெரிக்காவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. வெறுப்புணர்வே இதற்குக் காரணம். எனவே இந்தக் குற்றத்தை வெறுப்பு பிரசார பின்னணி கொண்டதாக கருதி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!