காலநிலை மாற்றம்: ஐ.நா. மாநாட்டில் இழுபறி

டர்பன்: காலநிலை மாற்றம் தொடர்பாக, தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் மாநாட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால், ஏழை நாடுகளுக்கு கவலைகள் அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக 'பசுமை காலநிலை நிதியம்' தொடர்பாக கடந்த ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

எனினும், இந்த நிதியம் மூலம் எவ்வாறு நிதியைத் திரட்டுவது உள்ளிட்ட விவகாரங்களால் தாமதமாகி வருகிறது.

தற்போது மிகுந்துள்ள இழுபறி நிலையால், வளர்ந்த நாடுகளால் தமக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிதியுதவி கிடைக்காமல் தடைபட்டுவிடுமோ என்று ஏழை நாடுகள் அச்சமடைந்துள்ளன.

புவி வெப்பமடைய காரணமான கார்பன் உள்ளிட்ட வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைப்பதற்காக ஏற்கெனவே அமலில் உள்ள சர்வதேச ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பது
சீனா, இந்தியா ஆகிய வளரும் நாடுகளின் நிலைப்பாடு.

மேலும், அடுத்த ஆண்டு நிறைவுறும் கியோட்டோ உடன்படிக்கை தான் வளர்ந்த நாடுகள் தமது கார்பன் வெளியேற்ற அளவை குறைப்பது தொடர்பாக, அவற்றை சட்டப்படி கட்டுப்படுத்தக் கூடிய ஒரே ஆவணம் என்றும் இந்தியாவும் சீனாவும் வாதிடுகின்றன.

அதேவேளையில், தொழில்துறையில் ஏற்றம் கண்ட பல்வேறு நாடுகளும் புதிய காலநிலை ஒப்பந்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

கடந்த 11 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கியோட்டோ உடன்படிக்கையில், அதிவேகமாக வளரும் பொரருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் உள்ளடக்கப்படவில்லை என்பது அவற்றின் வாதம்.

இந்த கருத்து வேறுபாடுகள் தான் டர்பனில் நடைபெற்று வரும் ஐ.நா. வருடாந்தர காலநிலை மாநாட்டில் ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படும் என்பதற்கான எதிர்பார்ப்புகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கார்பன் வெளியேற்றம் மென்மேலும் அதிகரிப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அச்சுறுத்தலும் வெகுவாக அதிகரிக்கிறது.

இதனிடையே, காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் நிதியுதவியை ஏழை நாடுகள் வேறு விஷயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் இந்தப் பிரச்னையை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!