வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (02/10/2015)

கடைசி தொடர்பு:14:52 (02/10/2015)

தடுமாறிய ஃபேஸ்புக் கைகொடுத்த ஆப்பிள் : ஸகர்பெர்க் வழிபட்ட இந்திய கோவில்!

ஃபேஸ்புக் தளத்தை இன்று உலகத்தில் 150 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 11 ஆண்டுகளுக்கு முன்,  ஃபேஸ்புக் தளம் தொடங்கப்பட்ட போது அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

நிறுவனமே தடுமாறிக் கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் அதனை தொடங்கிய மார்க் ஸகர்பெர்க்  ஃபேஸ்புக்கை  வேறு யாருக்காவது விற்று விட்டு போய் விடுவார் என்ற பேச்சும் அடிபட்டது. இக்கட்டான ஒரு சூழலில் மார்க் ஸகர்பெர்க் இருந்த போதுதான், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சை சந்தித்துள்ளார்.

அப்போது அவர், இந்தியாவுக்கு உள்ள கோவில் ஒன்றுக்கு போய் விட்டு வந்த பின்னர் தனது ஆப்பிள் நிறுவனம் அமோக வரவேற்பு பெற்றதாகவும் நீங்களும் அந்த கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று மார்க்கிடம் கூறியிருக்கிறார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த டவுண்ஹால் நிகழ்ச்சியின் போது இந்தியாவில் உள்ள அந்த கோவிலுக்கு சென்ற பின்னர்தான், தனது நிறுவனத்தில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அந்த நிகழ்வின் போது மார்க் ஸகர்பெர்க் கூறியதாவது, '' ஆப்பிள் நிறுவனரின் இந்த அறிவுரையை தொடர்ந்து உத்ராகாண்ட்  மாநிலத்தில் உள்ள நைனிடால் அருகேயுள்ள பத்நகர் என்ற இடத்தில்
கியன்ஞ்சி  தாம் என்ற கோவிலுக்கு சென்றேன். அங்குள்ள நீப் கரோலி பாபா என்பவரின் ஆசிரமத்தில் இரு நாட்கள் தங்கினேன். அதனருகில் இருந்த கோவிலுக்கு சென்றேன். மனதிற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஃபேஸ்புக்கும் மாற்றத்தை சந்தித்தது'' என்றார்.

நைனிடால் பகுதியில் உள்ள நீப் கரோலி பாபா ஆசிரமத்தில் ஹனுமான்தான் முக்கிய கடவுள். நீப் கரோலி பாபா கடந்த 1973ஆம் ஆண்டு மறைந்து விட்டார். ஆனாலும் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. பிரபல ஹாலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் இங்கு வந்து தங்குவது வழக்கம். முக்கியமாக அமெரிக்க மக்களால் விரும்பப்படும் ஆசிரமமாக இது திகழ்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்