தீவிரவாத தாக்குதல் எதிரொலி: மாலியில் அவசர நிலை!

பமோக்கா: தீவிரவாத தாக்குதல் காரணமாக மாலியில் 10 நாள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார் அந்நாட்டு அதிபர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி, 1960-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. அந்நாட்டு அதிபராக இப்ராகிம் பாவ்பாக்கர் கெய்ட்டா உள்ளார். 2013-ம் ஆண்டு, இந்த நாட்டின் வட பகுதியை அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் கைப்பற்றி, தலைநகர் நோக்கி அணிவகுக்க முயற்சித்தபோது பிரான்ஸ் தலையிட்டு, முறியடித்தது.

இந்த நிலையில், அந்த நாட்டின் தலைநகரான பமாக்கோவின் மையப்பகுதியில் உள்ள ராடிசன் புளூ என்ற ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ஓட்டலில் தங்கி இருந்த 140 விருந்தினர்கள், 30 ஊழியர்கள் என மொத்தம் 170 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். இதில் 20 இந்தியர்களும் அடங்குவர்.

இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும், அந்த ஓட்டலை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல மணி நேரம் நடந்த சண்டையின் முடிவில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை முடிந்த பின், ஓட்டலுக்குள் சென்று பார்த்தபோது 27 பேரின் உடல்கள் கிடந்தன. ஆனால், இந்தியர்கள் 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு, வடக்கு மாலியில் செயல்படும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் மொராபிட்டன் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநாடு ஒன்றில் பங்கேற்க சாத் நாட்டுக்கு சென்றிருந்த மாலி அதிபர் இப்ராகிம் பாவ்பாக்கர் கெய்ட்டா, தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாடு திரும்பினார். அதன்பின் அவர், உடனடியாக மாலியில் 10 நாள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன், 3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!