வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (14/12/2015)

கடைசி தொடர்பு:12:39 (14/12/2015)

சவுதி தேர்தல் : மெதினா, ரியாத் உள்ளிட்ட நகரங்களில் பெண் வேட்பாளர்கள் அமோக வெற்றி !

வுதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. புனித நகரமான மெதினாவில் இருந்து ஒரு பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தலைநகர் ரியாத்தில் அதிகபட்சமாக 4 பெண் வேட்பாளர்கள்  கவுன்சிலராகியுள்ளனர்.

மன்னராட்சியும் இஸ்லாமிய சட்டத்திட்டங்களும் அமலில் இருக்கும் சவுதி அரேபியாவில், அந்த நாட்டு குடிமகன்கள் உள்ளாட்சி தேர்தலில் மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். கடந்த 2005 மற்றும் 2011-ம் ஆண்டு சவுதி உள்ளாட்சி தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்களித்து வந்தனர். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதியளிக்கப்பட்டது.

இதையடுத்து 979 பெண் வேட்பாளர் சவுதி தேர்தல் களத்தில் இருந்தனர். பெண் வேட்பாளர்கள் நகரை தூய்மையாக்குதல், விளையாட்டு போட்டிகளுக்கு முன்னுரிமை, நகரை பசுமைப்படுத்துதல், சாலை வசதிகளை மேம்படுத்துதல், பெண்களுக்கு தேவையான வசதிகள் , இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக  கூறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சவுதி உள்ளாட்சி  தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 2,100 கவுன்சிலர் பதவிகளில் 17  பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலைநகர் ரியாத்தில் இருந்து அதிகபட்சமாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

வர்த்தக நகராமான ஜெட்டாவில் இருந்து இரு பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மெதினா நகரத்தில் இருந்தும் ஒரு பெண் வேட்பாளர் தேர்வாகியுள்ளார்.

சவுதியை பொறுத்தவரை முதல் தேர்தலிலேயே 17 பெண் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது பெண்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்