பதான்கோட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: அமெரிக்கா

வாஷிங்டன்: பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை நுழைந்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து இன்று 4-வது நாளாக அங்கு தீவிரவாதிகளை தேடும் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பதான்கோட் தாக்குதல் தொடர்பான ஆவணங்களை இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா பதான்கோட் தாக்குதல் தொடர்பான ஆவணங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளது. இந்தியா வழங்கிய ஆவணங்கள்படி செயல்பட்டு வருகிறோம். பதன்கோட் தீவிரவாத தாக்குதல் மிகவும் துரதிஷ்டவசமானது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான், இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளது" என்று தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

"இந்திய அரசு வழங்கிய தகவல்களின்படி பணியாற்றி வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தெற்கு ஆசியாவில் தீவிரவாதம் எல்லோருக்கும் சவலாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசுகளும், தீவிரவாதத்தை அழிக்க இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமெரிக்கா கேட்டு வருகிறது. தீவிரவாத நெட்வொர்க் அழிக்கப்பட வேண்டும்" என்று அமெரிக்கா மேலும் கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!