சீன தலைவர் மாவோ சேதுங்கின் பிரமாண்டமான சிலை இடிப்பு!

பீஜிங்: சீனாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்கிற்கு நிறுவப்பட்ட பிரமாண்டமான சிலை இடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவரான மாவோ சேதுங் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 20-ம் நூற்றாண்டில் சீனாவில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டு போரையும் முன்னின்று நடத்தியவர். பின்னர், சுமார் 30 ஆண்டுகள் சீனாவை வல்லமையுடன் ஆட்சி செய்தார். அதனால் அவர் சீனாவின் சிற்பி என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், மாவே சேதுங்கிற்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள டாங்ஸு நகரில் 121 அடி உயர பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது. இரும்பால் செய்யப்பட்ட இந்த சிலைக்கு தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டது.

தொழில் அதிபர்களிடமும், விவசாயிகளிடமும் பணம் வசூலித்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் டாலர் செலவில் (சுமார் ரூ.3 கோடி) இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சிலையை திடீரென சீன அரசு இடித்துள்ளது. சிலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் முறைப்படி பதிவு செய்து, உரிய அனுமதி பெறவில்லை என கூறப்பட்டிருக்கிறது.

இடித்து தள்ளப்பட்ட மாவோ சேதுங் சிலை காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!