வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (17/03/2016)

கடைசி தொடர்பு:18:18 (17/03/2016)

டென்மார்க் உலகின் மகிழ்ச்சியான தேசம்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

தினம் தினம் போர்களையும் சண்டைகளையும் கண்டு கொண்டிருக்கும் இப்பூவுலகின், மகிழ்ச்சியான தேசமாக தேர்வாகியுள்ளது டென்மார்க்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘உலக மகிழ்ச்சி அறிக்கை’ யில்,  2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 156 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து,  உலகின் மிகவும் சோகமான நாடு என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது ஆப்பிரிக்க நாடான புருண்டி.
 
வேலை வாய்ப்பு, வாழ்க்கை முறை, உடல்நலம், கல்வி என எத்தனையோ அம்சங்கள் கணக்கெடுக்கப்பட்டு இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வெறும் 58 லட்சம் பேர் வசிக்கும் நாடுதான். ஆனால் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை தரும் ஆட்சிமுறை. ‘நமக்கு வேலை போனாலும், பிரச்னைகள் வந்தாலும் அரசாங்கம் உதவ முன்வரும்’ என்று மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையே டென்மார்க் மக்களின் மகிழ்ச்சிக்கான காரணம். இத்தேசத்தில் வரிகள் கொஞ்சம் அதிகம்தான். பள்ளிகள், பலகலைக்கழகங்களுக்குக் கூட வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் மக்களின் நலனிற்கே செலவிடப்படுகிறது.

அனைவருக்கும் இலவச மருத்துவம், 7 வருடங்கள் வரை மாணவர்களுக்கு மானியம் என நம் நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்களை மக்களுக்கு செய்துகொண்டிருக்கிறது டென்மார்க் அரசு. அந்நாட்டின் உயரிய வேலைகளில் 43 சதவிகிதம் வேலைகளை அந்நாட்டின் பெண்கள் செய்துவருகின்றனர் என்பது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

உலக நாடுகளில் மகிழ்ச்சி என்னும் விஷயத்தை பெரிதும் பாதிப்பது சமத்துவமின்மையே. உலகின் ஆடம்பர  தேசமான அமெரிக்கா கூட இப்பட்டியலில் 13 வது இடத்தில்தான் உள்ளது. சமீப காலமாக அந்நாட்டில் சமத்துவமின்மை தலைவிரித்தாடுவது குறிப்பிடத்தக்கது. இரு வாரம் முன்பு நடந்த ஆஸ்கர் விருதுகளில் கூட நிறப்பாகுபாட்டுப் பிரச்னை எழுந்தது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து ஆகிய தேசங்கள் முதல் ஐந்து இடங்களிலுள்ள பிற நாடுகளாகும்.

ஆப்பிரிக்க நாடான புருண்டி, இப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து உலகின் சோகமான தேசம் என்ற பெயர் பெற்றுள்ளது. உள்நாட்டுப் போர்கள், ஊழல், கல்வியின்மை, எச்.ஐ.வி பாதிப்பு என அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கெட்டுப் போகக் காரணங்கள் ஏராளம். உள்நாட்டுப் புரட்சியால் இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்ட சிரியாவைக் காட்டிலும் புருண்டி நாட்டின் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. புருண்டியுடன் டோகோ, ஆப்கானிஸ்தான், பெனின் மற்றும் சிரியா ஆகியவை கடைசி ஐந்து இடங்களில் உள்ளன. ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய தேசங்கள் இப்பட்டியலில் பின்தங்கியே இருக்கின்றன. சீனா 83வது இடத்தில் இருக்கிறது.“பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் போன்ற அனைத்து துறைகளும் மேம்படும்போது மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அனைத்து நாடுகளும் அதில் கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட், ஸ்காட்லாந்து, வெனிசுலா போன்ற நாடுகள்,  மக்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தவென்று தனியாக அமைச்சரவை அமைத்து செயல்படுகின்றன. அதைப் பிற தேசங்களும் பின்பற்ற வேண்டும்” என்கின்றனர் இப்பட்டியலைத் தயாரித்த வல்லுநர்கள்.

எல்லாம் சரி....அமைதிக்கும் ஆன்மீகத்துக்கும் பெயர் போன நம் இந்தியா,  இப்பட்டியலில் எந்த இடத்திலுள்ளது தெரியுமா? 118 வது இடம். வருடம் முழுவதும் பண்டிகைகள், திருவிழாக்கள், திரைப்படங்கள், ஐ.பி.எல் என இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக எத்தனையோ விஷயங்கள். ஆனால் மக்களின் வாழ்வாதாரம் எப்படியுள்ளது. 128 கோடிமக்கள் தொகையில் எத்தனை உதடுகள் தினமும் சிரிக்கின்றன? பசிக்காகவும், உரிமைகளுக்காகவும் எத்தனையெத்தனை போராட்டங்கள்? சுரண்டும் முதலாளிகளுக்கெதிராக தொழிலாளர்களும், விஷமத்தனமான ஆண்களுக்கெதிராக மகளிரும், அரசியல் செய்யும் கல்லூரிகளுக்கெதிராக மாணவர்களும், ஆட்டுவிக்கும் அரசுக்கெதிராக அனைத்து மக்களும் ஒவ்வொரு விடியலையும் போராட்டத்துடனேயே கடந்து வருகின்றனர். ஒன்றுக்கும் உதவாத கல்வி, அக்கல்வியால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, அதனால் ஏற்படும் சமூக ஏற்றத்தாழ்வு என இந்தியன் கவலைப்படத்தான் எத்தனை விஷயங்கள்.

ஒரு அரசின் கடமை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு முடிந்துவிடுவதில்லை. மக்களின் மனதிற்கும் அது நல்லவை செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட், டென்மார்க் போன்ற தேசங்களை பார்த்து மனம் மாற வேண்டும்! 

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்