'பிரபாகரன் இல்லாமல் விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாது!'

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லாததால், அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்க முடியாது என்று இலங்கை அரசின் வடக்கு மாகாணக் கவுன்சில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வெடிபொருள்கள், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் மேல் சட்டைகள், தோட்டாக்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை சமீபத்தில் கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. மேலும், கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் அனைத்தும் புதிதாக இருப்பதால், உண்மை நிலவரம் என்ன? என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் கொழும்பில், இலங்கை அரசின் வடக்கு மாகாணக் கவுன்சில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் அனைத்தும் 7 ஆண்டுகளுக்கு முன்பு பதுக்கி வைக்கப்பட்டவை. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இல்லாமல் அந்த இயக்கம் தலைதூக்க முடியாது. அதனால், இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க முயல வேண்டாம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!