காபி பிரியரா நீங்க...சுற்றுச்சூழலின் நண்பன் ஆகலாம் வாங்க! #WhereIsMyGreenWorld

வ்வொரு நாளும் உலகம் முழுக்க அகற்றப்பட முடியாமல்  குவிந்துவரும்​ ​குப்பைகள் ஒருபுறம் என்றால்... எதிர்காலத்தையும்​,​வருங்கால சந்ததியினரைப் பற்றியும் ​கொஞ்சம் கூட கவலைகொள்ளாமல் சரமாரியாக மரங்கள் வெட்டப்படுவது மறுபுறம்... மரங்கள் வெட்டப்பட்டதனால் இன்று  உலகம் சந்தித்துவரும் பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல!

மத்தியப் பிரதேசத்தில் கிசிபுரா என்ற பகுதியில் மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் மரக்கன்றுகளை சீராக கேட்கும் அளவு மரத்தின் தேவை  பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு மரங்கள் காணாமல் போய்விட்டன.

உலகின் இந்த இரு மிக முக்கியமான பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரே தீர்வு இருந்தால்?

“இருந்தால் என்ன, தீர்வு இருக்கிறது” என்கின்றது கலிபோர்னியாவை சேர்ந்த ‘Reduce Reuse Grow’ என்கின்ற ​தன்னார்வ தொண்டு நிறுவனம்.

பயன்படுத்திய பின் மண்ணுக்குள் நடக்கூடிய 'பயோ காபி கப்' (bio coffee cup)​என்ற காபி கோப்பைகளை உலகிலேயே முதன்முறையாக​ வடிவமைத்துள்ளனர் இவர்கள். காபி அருந்திய பின்னர் அந்த காபி கோப்பையை மண்ணுக்குள் புதைத்துவிட்டால் ​போதும். அது செடியாக வளர்ந்துவிடும்.

ஆய்வு ஒன்றில், சராசரியாக ஒரு நாளைக்கு அமெரிக்காவில் மட்டும் ​400 மில்லியன் காபி கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.​ ​இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மண்ணில்​ ​புதைந்த பின் மட்குவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ​ஆனால் இவர்கள்​ ​வடிவமைத்துள்ள இந்த பயோ காபி கப்​,​மூன்று மாதங்களுக்குள் மட்கி செடியாகவே முளைத்து விடுகிறது.

இந்த பயோ காபி கோப்பைகள் PLA என்கிற ஒரு வகையான மட்கும் பிளாஸ்டிக்கால் கோட்டிங் செய்யப்படுகிறது. அதனோடு அறிய​வகை பூச்செடிகளின்​ ​விதைகளும் செலுத்தப்படுகின்றன. காபி அருந்திய பின் இந்த கப்புகளை​ ​தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வரை ஊறவைத்து மண்ணுக்குள் புதைத்து விட்டால்போதும். அவை மட்கி, விதைகள் மண்ணுக்குள் புதைந்து கொஞ்சநாளில் செடியாக வளர்ந்து நிற்கும்.

மண்ணில் புதைக்கப்படும் ஒவ்வொரு பயோ காபி கப்புக்குள் இருந்தும் ஒரு​செடியாவது முளைக்கும். சிலசமயம், பல நூறு வருடங்கள் வாழப்போகும் ​மரங்கள்கூட வளரலாம். இந்த காபி கோப்பைகளை தோட்டங்கள், திறந்தவெளி என​ எங்கு வேண்டுமானாலும் புதைக்கலாம்.

அப்படி காபி குடித்துவிட்டு கோப்பைகளை மண்ணில் புதைக்க கூட முடியாமல் சோம்பேறித்தனமாய் இருப்பவர்களுக்காக ​'​Reduce​ ​ Reuse Grow’ நிறுவனம் அங்கங்கே குப்பை தொட்டிகளை​ நிறுவி, அதில் சேரும் கோப்பைகளை​ ​மண்ணில் புதைத்து செடியாக்கி வரும் சேவையையும் செய்துவருகின்றது.

இந்த புதுமையான விஷயம் மக்களிடம் பரவி இப்போது பலரும் இந்த யோசனையை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கடந்த சில மாதங்களில் இப்படி அங்கு ​கிட்டத்தட்ட ஒரு​ ​லட்சம் கோப்பைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன . கலிஃபோர்னியா மட்டுமின்றி பிற இடங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

“ஒருசமயம் தெருவில் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை கண்டபோது, 'தேவையில்லாத இந்த​ஒவ்வொரு குப்பையும் ஒரு மரமாய் முளைத்திருந்தால் இந்நேரம் இந்த பூமி​​எப்படி மாறியிருக்கும்” என்று தோன்றியது. இந்த ஒரு சிறு எண்ணத்தின் செயலாக்கம்தான் இந்த ​'​பயோ காபி கப்’ என்கிறார் இந்த ஐடியாவை செயலாக்கிய ‘Reduce Reuse Grow’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் ஹெனிகே.

சுற்றுச்சூழலை மேம்படுத்த பழைய திட்டங்களையே செயல்படுத்திக்கொண்டிருக்காமல் அதில் சில புதுமைகளை புகுத்தி நம்மூரிலும் இப்படி புதுமையான விஷயங்களை யோசித்து செயற்படுத்தினால் ஒவ்வொரு காபி பிரியரும் சுற்றுச்சூழலின் சிறந்த நண்பனாக முடியும்...

நாமும் செயல்படுத்தலாமே...

- கோ. இராகவிஜயா
மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!