அடுத்து எந்த நாட்டின் மீது படை எடுக்கலாம்? - அமெரிக்காவை அதட்டும் ஆவணப்பட இயக்குநர்!

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் மீதும், அமெரிக்க அரசியலின் மீதும், அமெரிக்கக் கனவின் மீதும் சாணி அடிப்பதையே வழக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆவணப்பட இயக்குநர்  ’மைக்கேல் மூர்’ சமீபத்தில் எடுத்திருக்கும் ஆவணப்படம், 'அடுத்து எந்த நாட்டின் மீது படை எடுக்கலாம்?'

என்ன இது... மைக்கேல் மூர் கடைசிக்காலத்தில் அமெரிக்க அரசோடு சமரசமாகிவிட்டாரா? அமெரிக்காவின் போர் வெறிக்குத் துணை போவது போலான தலைப்பாக இருக்கிறதே, அல்லது வழக்கம் போல மைக்கேல் மூரின் நையாண்டித்தனமானத் தலைப்பா என்று யோசித்துக்கொண்டேதான் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது.  அமெரிக்காவின் சுதந்திர தினத்தை விட இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேறு சிறந்த நாள் கிடைத்துவிடாது.

அமெரிக்காவின் மருத்துவச் சேவைகளையும், அதன் போதாமைகளையும் ‘சிக்கோ’ (Sicko) என்ற ஆவணப் படத்தின் மூலமாகவும், இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்ட நிகழ்வை, ஜூனியர் புஷ் அரசாங்கத்தின் மீதான விமர்சனமாக முக்கியமாக முன் வைத்து ’ஃபாரென்ஹீட் 9/11’ (Fahrenheit 9/11) என்ற ஆவணப் படத்தின் மூலமாகவும், அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் பின்னணியை வைத்து, அமெரிக்க அரசைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ’Capitalism: A Love Story’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கிய மைக்கேல் மூர், இதுபோன்று அமெரிக்க அரசைக் கேள்விக்குள்ளாக்கும் மேலும் பல ஆவணப்படங்களை எடுத்துள்ளார். அவரின் அடுத்த படமாக Where to Invade Next வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா, எந்த ஒரு பெரியப் போரையும் வெல்லவில்லை. வியட்நாம் எந்தளவுக்குப் பெரிய தோல்வியோ அதே போலத்தான் வளைகுடாப் போர், ஆஃப்கானிஸ்தான், ஈராக் என்று எல்லாமே பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரிய தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. இப்படி அமெரிக்க அரசே சொதப்பும் நிலையில், 'நான் தனி ஒரு ஆளாக படையெடுத்து பல நாடுகளுக்குச் சென்று வென்று வருகிறேன்' என்று மைக்கேல் மூர் கிளம்புவதுதான் ஆவணப்படத்தின் மைய இழை. அப்படி அவர் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், நார்வே, துனிசியா, ஸ்லோவேனியா, ஐஸ்லாந்து என்று பல நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்கிறார்.

அமெரிக்க அரசாங்கம், ஒரு நாட்டின் மீது எதற்கெல்லாம் படையெடுத்துச் செல்லுமோ அதற்காக மைக்கேல் மூர் கிளம்பவில்லை.

அமெரிக்கா எந்தெந்த துறைகளில் எல்லாம் தவறு செய்கிறது?  அமெரிக்கா ஒவ்வொரு நாடுகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய கலாசாரம், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அமெரிக்காவின் தவறான சட்டங்களைத் திருத்திக்கொள்ளத் தேவையான படிப்பினைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு வருவதும், அவற்றை செயல்படுத்த அமெரிக்க அரசை நெருக்குதல் கொடுப்பதும்தான் அவருடைய இந்த படையெடுப்புகளின் முக்கிய நோக்கமாக இருக்கின்றன.

'அமெரிக்க கனவு' என்ற பிம்பத்துக்குப் பின்னால் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம்,  பிற நாடுகளின் மக்களுடன் ஒப்பிடும் போது எந்தளவுக்கு மிகவும் தாழ்வாக இருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தது போல உணர வைக்கிறார் மைக்கேல் மூர். உதாரணமாக, பிரான்சில் உள்ள பள்ளிக்குழந்தைகளின் உணவு முறையையும், உணவு இடைவேளை என்பது முகத்தில் உணவைத் திணித்துக்கொள்வது அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்பதையும் கூறிவிட்டு, அமெரிக்க மாணவர்களின் உணவுகளைக் காட்டும்போது பிரான்சின் மாணவர்கள் காட்டும் முகபாவங்களும், 'இது உணவே அல்ல, குப்பை' என்று சொல்வதுமாக அமெரிக்க கனவின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கிறார்.

டுக்காட்டி, பேஃபர் காஸில் போன்ற பெரிய நிறுவணங்கள், அவர்களது தொழிலாளர்களுக்கு வழங்கும் வசதிகள், விடுமுறைகள், ஊதிய விகிதங்கள் போன்றவற்றை அமெரிக்கத் தொழிலாளர்களோடு ஒப்பிடுவதோடு, அமெரிக்காவில், 'தொழிலாளர் நலன்' என்ற வார்த்தையே சட்ட விரோதமானது என்பதை வேறு சொல்லி அதிர்ச்சியளிக்கிறார்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, அமெரிக்க கல்வித் தரத்தில் உள்ள குறைபாடு, சிறைக்கைதிகளை அமெரிக்கா நடத்தும் விதம், போதைப் பழக்கத்தை அரசாங்கத்தின் கொடூர நடவடிக்கைகளே எப்படி இன்னும் அதிகமாக்குகின்றன, கறுப்பினத்தவர்களை நடத்தும் விதம், பெண் உரிமைச் செயற்பாடு எப்படி சுருங்கிப் போனது, படித்து முடிக்கும் போதே கல்லூரி மாணவர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கும் கடன் சுமையும் பிற நாடுகளின் இலவசக் கல்லூரி கல்வியையும் ஒப்பிடுவது, அமெரிக்க கனவு எப்படி அமெரிக்கர்களை சுயநலமிக்கவர்களாக மாற்றி வைத்திருக்கிறது, மரணத் தண்டனை குறித்த மனிதநேயப் பார்வையும் அமெரிக்க பார்வையையும் பற்றிய ஒப்பீடு, அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாசாரம், அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான வங்கிகளையும், வங்கியாளர்களையும் அமெரிக்கா காப்பாற்றியது எவ்வளவு மோசமானது என அமெரிக்க வாழ்க்கை முறையின் அத்தனை அம்சங்களிலும் உள்ள அடிப்படை தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.


உடைக்கவே முடியாது என்று நினைத்த பெர்லின் சுவரையே மக்கள் சிறிய சுத்திகளையும் உளியையும் வைத்து காலங்காலமாக உடைக்க முயற்சித்து வந்ததும், உடைக்கவே முடியாதது என்று இருந்த அந்த சுவர் வீழ்ந்ததும் வரலாறு. அது போல இந்த நாடுகளில் இருந்து மைக்கேல் மூர் கொண்டு வந்த சின்ன சின்ன யோசனைகளை அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதாக இந்த ஆவணப்படத்தை முடிக்கிறார்.

வரலாற்றில் தான் செய்த, நடந்த  கொடூரங்களை அடுத்த தலைமுறைக்கு மறைத்துவிடுவதும் மறந்துவிடுவதும் சரியல்ல, அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்ல வேண்டும். 'ஜெர்மானியர்கள் செய்வதைப் போல என்ற விஷயம்' அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது. இந்த ஆவணப்படத்தை அமெரிக்காவை மையமாக வைத்து மைக்கேல் மூர் எடுத்து இருந்தாலும்,  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியதுதான். சாதி என்ற கொடும் விஷம் இந்தியர்களின் மனப்பான்மையை எவ்வளவு தூரம் கலைத்துப்போட்டிருக்கிறது, கல்வித்தரமும் உணவுத்தரமும் எப்படி மக்களை சீரழிந்து வதைக்கிறது என்பதையும், ஆவணப்படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்  நாம் இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.


 

மைக்கேல் மூரிடம் பேசிய துனிசியப் பெண் ஒருவர், ”அமெரிக்கர்கள் தங்கள் கலாசாரம் உயர்ந்தது என தங்களைப்பற்றி பெருமையடித்துக் கொள்வார்கள், பிறரைப் பற்றி ஒன்றும் தெரியாது. உங்களிடம் இருக்கும் இணையத்தின் வலிமையை வைத்து பிறரது கலாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளுங்கள், பிறருடன் சகோதரத்துவத்துடன் வாழப்பழகுங்கள்,  அநீதிகளுக்கு எதிராகப் போராடுங்கள்” என்று சொல்லியிருப்பார்.

இந்தக் கருத்து கூட இந்தியாவுக்கும் பொருந்தும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் 22 வயதில் அமெரிக்காவுக்குப் படிக்கப்போன அம்பேத்கரும் இதைத்தான் “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்று சொன்னார். இந்த சுதந்திர தினத்தில் அமெரிக்கா பின்பற்ற வேண்டியதும், இந்தியா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியதும் இதைத்தான்.

- இனியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!