மதீனா மசூதி அருகே தற்கொலைப் படை தாக்குதல்! -தொடர் குண்டு வெடிப்புக்கு 4 பேர் பரிதாப பலி | Suicide Bombers hit Saudi cities of Madinah, Qatif and Jeddah

வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (05/07/2016)

கடைசி தொடர்பு:09:15 (05/07/2016)

மதீனா மசூதி அருகே தற்கொலைப் படை தாக்குதல்! -தொடர் குண்டு வெடிப்புக்கு 4 பேர் பரிதாப பலி

மதீனா: சவுதி அரேபியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து மதீனா மசூதி அருகே உள்ளிட்ட 3 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டு உள்ளனர். இது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, மெக்காவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் இரண்டாவது புனித தலமான மதீனாவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தி உள்ளார். அதுபோல, கட்டிப் நகரிலும் மற்றொரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி உள்ளார்.

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள ஷியா பிரிவினரின் மசூதி அருகே, தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை தீவிரவாதி வெடிக்கச் செய்திருக்கிறார். இதில் அவரது உடல் சுக்கு நூறாக சிதறியது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதீனா நகரில் ராணுவ தலைமையகம் அருகே உள்ள மஸ்ஜித்-இ-நப்வி எனும் இடத்தில் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, போர்க்களமாக காட்சியளித்தது.

இந்த தாக்குதல்களில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாளன்று, முஸ்லிம்கள் இரண்டாவது புனித தலமாக கொண்டாடும் மதீனாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அங்கு பலத்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவங்களால், சவுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close