Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புலி... காடுகளின் காவலனை நாம் ஏன் காக்க வேண்டும்? #InternationalTigerDay

உலக புலிகள் தினம் இன்று (ஜுலை 29). இந்தியாவின் தேசிய விலங்கான புலியைப் பற்றி இந்த நாளில் அறிந்து கொள்வோம்.

20 ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளிலும் விரவிப் பரவியிருந்த புலிகள், மனிதர்களை அதிகம் கவரும் விலங்கினமாக இருந்தது; இருக்கிறது. ஆனால் இன்று அதே மனிதர்களின் பேராசையினால் அருகிவிட்ட விலங்கினங்கள் பட்டியலில் புலி இனம் இடம்பெற்றுவிட்டது சோகம்.

தனித்துவமான முகம், கவர்ந்திழுக்கும் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற கோடுகள் என பூனை இனங்களின் பெரிய விலங்காக விளங்குவது புலி இனம். இந்த இனம் அருகி கொண்டே வருவதை கண்ட விலங்கின ஆதரவாளர்கள் ஒன்று கூடி அதன் அழிவை தடுத்து நிறுத்துவதற்கும், புலிகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக,  2010 ம் ஆண்டில் ஜுலை 29 ம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவித்தனர்.

பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைப்பதற்கும், காடுகளை அழிவில் இருந்து காப்பதற்கும் புலிகளின் எண்ணிக்கை சீராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து காடுகளின் வளம் குன்றிவிடும். கானகத்தின் காவலனாக திகழும் புலி இனங்கள் அதன் தோலுக்காகவும், மருத்துவ பயன்பாட்டிற்காகவும் அதிக அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக பல ஆயிரங்களாக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது சில ஆயிரங்களுக்குள் சுருங்கிவிட்டது.

இருட்டிலும் ஊடுருவி கண்காணிக்கும் கண்கள், வலிமையான நகங்கள், 300 கிலோவுக்கும் அதிகமான எடை என்ற சிறப்புகள் கொண்ட புலி இனம், பூனைக் குடும்பத்தை சேர்ந்தது. பாலூட்டி வகையை சேர்ந்த புலி, ஒரே நேரத்தில் 4 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். நூற்றுக்கணக்கான வரிகளை தனது உடலில் கொண்டிருக்கும் புலி, மணிக்கு 40 மைல் தொலைவிற்கு ஓடும் வலிமை வாய்ந்தது.

300 கிராம் அளவு கொண்ட மூளையின் விரைவான செயல்பாட்டால் நொடிக்கு 30 அடி தூரம்வரை பாய்ந்து பலமான விலங்குகளையும் வேட்டையாடும் திறமை படைத்தது. புலி இனத்தில் பெரியது, சைபீரிய புலி. சிறியது, பாலி புலி. இந்தோனேஷியாவின் பாலி தீவில் இவை காணப்பட்டதால் இதற்கு பாலி புலி என பெயர் வந்தது. நீரில் நன்கு நீந்தத் தெரிந்த புலி, மிக நீளமான ஆற்றை கூட எளிதில் நீந்திக் கடந்து விடும் வலிமை கொண்டது என்பது ஆச்சர்யமான தகவல்.

வங்கப் புலி, இந்திய சீனப் புலி, சைபீரியப் புலி, சுமத்திரா புலி, மலயான் புலி, தென் சீனப் புலி ஆகியன இன்றளவும் காணப்படும் புலி இனங்கள் ஆகும். முற்றிலுமாக அழிந்துவிட்ட புலி இனங்களான பாலி புலி, ஜாவா புலி, கேஸ்பியன் புலி ஆகியவற்றைப் போலவே தற்போது வாழ்ந்துவரும் புலி இனங்களும் அருகி வரும் இனங்களாக உள்ளன. உலகில் உள்ள மொத்த புலிகளில் 70% புலிகளை கொண்டது இந்தியா.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தி வரும் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் பயனாக 2013 ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 2,226 புலிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இங்குதான் புலிகள் அதிக அளவு கொல்லப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் உள்ளது. 2010 ம் ஆண்டு முதல் 2014 இடையேயான 4 ஆண்டுகள் காலத்தில் மட்டும் 128 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 49 புலிகள் சரணாலயங்கள் உள்ளன.

இந்தியாவிற்கு அடுத்து அதிகளவு புலிகள் உள்ள நாடு ரஷ்யா (433). இவை தவிர இந்தோனேஷியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, வங்கதேசத்தில் 106, பூடானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாவோஸ் நாட்டில் அதிர்ச்சி தரும் விதத்தில் 2 என புலிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சமீப காலமாக அழிந்து வரும் புலிகள் இனம், இந்தியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மகிழ்ச்சியான செய்தி.தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை 225 முதல் 230 க்குள் இருக்கலாம் என்கிறது புள்ளிவிவரம். இது கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்த எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கைவிரல் ரேகை வித்தியாசப்படுத்தி காட்டுவது போல்,  புலிகளின் கால் விரல் ரேகைகள் ஒவ்வொரு புலிக்கும் இடையேயும் வித்தியாசப்பட்டிருக்கும். புலியின் வேகத்தை போலவே அதன் உணவும் அதிகமானதாக இருக்கும். ஒரே நேரத்தில் சுமார் 40 கிலோ இறைச்சியை உண்ணும் தன்மை கொண்டவை புலிகள்.

மனிதர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு சுத்தமான காற்றும் நீரும் அவசியம். அவை இரண்டையும் தருவது காடுகளே. அந்த காடுகளைக் காக்க உதவும் புலிகளை நாம் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- இரா.மோகன்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement