Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிர்வாண ட்ரம்ப் - இதுவல்ல உருவ பொம்மை அரசியல்! #DonaldTrumpStatue

வம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருப்பது உலகம் அறிந்த செய்தி. முன்பைவிட அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி இன்று உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றால்... அதற்கு ஒரே காரணம், டொனால்ட் ட்ரம்ப் என்ற ஒற்றை மனிதரின் வினோதமான நடவடிக்கைகள்தான்.

எப்போதும் தாமாகவே வாயைவிட்டு, சர்ச்சைகளிலும், விவாதங்களிலும் சிக்கிக்கொள்ளும் ட்ரம்ப் எதிர்மறை விமர்சனங்களால் மட்டுமே உலகம் முழுவதும் பிரபலமானவர். இவர் தற்போது 'இன்டிக்லைன்' என்ற, 'அரசற்ற நிலை'யை விரும்பும் கலை அமைப்பின் மூலம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைந்திருக்கிறார். 'இன்டிக்லைன்' எனும் அமைப்பு செய்திருப்பது வினோதமானதும், விசித்திரமானதும்கூட. இணையத்தில், தற்போது வைரலாக அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் பரவிக்கொண்டிருக்கின்றன.

ட்ரம்ப்பின் நிர்வாணச் சிலைகள்!
ட்ரம்புக்கு, 10 அடி உயரத்தில் ஐந்து சிலைகளைச் செய்திருக்கிறது. அந்தச் சிலைகள் இவ்வாறு இருந்தன... கடுமையான முகத் தோற்றம், பெரிய தொப்பை, சிறிய விரல்கள் கொண்ட கைகள் தொப்பையைக் கட்டியிருக்கிறது. இப்படி முழு நிர்வாணமாக வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரம்ப்புக்கு விரைப்பைகள் இல்லை.

ட்ரம்பின் இத்தகைய நிர்வாணச் சிலைகள் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்ஸிஸ்கோ, கிளேவளன்ட் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய 5 நகரங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தச் சிலைகளைப் பார்த்த மக்கள் பலரும் இதனை ரசிப்பதுடன், ஆர்வமாக செல்ஃபி எடுத்துப் பகிர்ந்துகொள்கின்றனர்.

ட்ரம்ப் உருவாக்கிய பிம்பம்!
ட்ரம்பின் இந்தச் சிலையை மக்கள் மிகவும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம், ட்ரம்ப் குறித்து அவர் மக்களிடையே உருவாக்கியுள்ள பிம்பம்தான். எனவே, முழு நிர்வாண நிலையில் விறைப்பைகள் இல்லாமல், 'நோ பால்ஸ்' என்று குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலைகள், கர்டாசியன்களின் காலத்தில் வாழும் மக்களுக்கு வேடிக்கையாக இருப்பதில் பெரிய ஆச்சர்யமில்லை.

அரசியல் நையாண்டிகளைத் தாங்கும் ஓவியங்கள்!
ஆனால், இது அப்படி ஒதுங்கிப்போகக்கூடிய, வேடிக்கையாக மட்டுமே பார்க்கக்கூடிய விஷயமில்லை. டாவின்சி காலத்திலிருந்தே பல ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத ஓர் அரசியல் விமர்சனத்தை, நையாண்டியை ஓர் ஓவியம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது. உதாரணத்துக்கு மிகப் பிரபலமான ஓர் ஓவியத்தை இங்கே நாம் பொருத்திப் பார்க்கலாம். 1740-களில் இங்கிலாந்து பேரரசின் பிரதமராக இருந்த ராபர்ட் வால்போலின், கால்சட்டையைக் கழட்டியநிலையில் குனிந்து தனது பிட்டத்தைக் காட்டும்படியான ஓவியம் ஒன்று வரையப்பட்டது. அந்த ஓவியத்தில் பதவி உயர்வு வேண்டுமெனில், 'இந்த ஓவியத்தை வணங்கி வழிபட வேண்டும்' என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அப்போதைய அரசியல் நிலைமையை விமர்சனம் செய்வதாக அமைந்த அந்த ஓவியத்துக்கும், தற்போது நிர்வாணமாக்கப்பட்டு உள்ள ட்ரம்ப்புக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.

இழிவுபடுத்தல் ஒருபோதும் அரசியல் ஆகாது!

ட்ரம்ப், கையாலாகாதவர் என்பதை எவ்வளவு உச்சத்துக்குச் சென்று வெளிப்படுத்த முடியுமோ, அந்த உச்சத்தைத் தொட்டிருக்கிறது இந்தச் சிலைகளின் வடிவமைப்பு. ட்ரம்ப் என்னதான் அமெரிக்க அரசியலுக்கு முரண்பாடான கருத்துகளை, கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அவரை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி இருப்பதன் நோக்கம் என்னவென்றுதான் புரியவில்லை.

அரசியலில் உருவ பொம்மை வழிபாடு, உருவ பொம்மை எரிப்பு ஆகியவை எல்லா நாடுகளிலும் நடந்தேறுவதுதான். ஆனால், பிறப்புறுப்பு இல்லாமல், கையைக் கட்டிக்கொண்டு வெறிகொண்ட முகத்துடன் நிற்கும் இந்தச் சிலைகள் ஒரு தனிமனிதனின் மீதான வன்முறையே தவிர, வேறு எதுவும் இல்லை.

- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement