வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (21/08/2016)

கடைசி தொடர்பு:13:04 (23/08/2016)

இனி வறுமையைக் கணக்கிட, செயற்கைக்கோள் போதும்! #Technology

                            

முன்பெல்லாம் நாட்டின் வறுமையான இடங்களை கணக்கெடுப்பதற்கு நேரில் சென்று கணக்கெடுத்து அதனை 'வரைபடம்' (Map)  மூலம் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வரைபடத்தின் மூலம் ஒரு நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் இப்போது "செயற்கைக்கோளில் 'ஆட்டோமேட்டிக் இன்டிலிஜென்ஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஓரிடத்தில் வாழும் மக்களின் வறுமை நிலையை அறிய முடியும்" என்ற புதிய தொழில்நுட்பத்தை 'ஸ்டான்போர்ட்' பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர்.

உலகமெங்கும் தலைவிரித்தாடும் வறுமையினால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பசி, பட்டினியாலும், சுகாதார சீர்கேட்டாலும் உயிரிழந்து வருகின்றனர். முக்கியமாக வளரும் நாடுகளில் இந்நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சர்வதேச அமைப்புகளும், உள்ளூர் அரசாங்ககளும் பல்வேறு நிதிகளை செலவிட்டாலும், அது மக்களை முறையாக சென்றடைகிறதா என்றால் கேள்விக்குறிதான். இதற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன.


    இந்த நிலையில், பொதுவாக ஓரிடத்தின் வறுமை நிலையை கணக்கிடுவதற்கு தன்னார்வலர்களையோ அல்லது அரசாங்க அதிகாரிகளையோ அங்கு நேரிடையாக அனுப்பி அம்மக்களின் வருமானம், வசதிகள் சார்ந்த பல்வேறு கேள்விகளை கேட்டபின் அவை ஒரு நாளைக்கு $1 கீழ் இருந்தால் அவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படுகிறது. இம்முறையானது அதிக நேரம், மனித உழைப்பு மற்றும் அதிக செலவுகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் போர் நடக்கும் இடங்கள், காட்டுப்பகுதிகள் மற்றும் தீவிரவாத ஆதிக்க பகுதிகளில் கணக்கெடுப்பை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் விஞ்ஞானிகள் இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வந்தனர்.

செயற்கைக்கோள் மூலம் இரவில் படமெடுக்கும் தொழில்நுட்பம்:

                       

     நாளுக்கு நாள் முன்னேறி வரும் 'லிடார்' போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வறுமையை அளவிடுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன. செயற்கைக்கோள்  மூலம் குறிப்பிட்ட இடத்தை இரவு நேரத்தில் புகைப்படம் எடுப்பதன் மூலம் அங்குள்ள மின் விளக்கு வெளிச்சத்தின் அடிப்படையில் வறுமையை கணக்கிட்டனர். ஆனால் காடுகள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் வேறுபட்ட சூழ்நிலைகள் நிலவுவதால் அதன் முடிவு கிடைக்கவில்லை.

வறுமையான இடங்களை காட்டிய தொழில்நுட்பம்:

    இரவு நேரங்களில் வெறும் மின்விளக்கின் வெளிச்சத்தை மட்டுமே கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முறை பயன் அளிக்கவில்லை. இதனால் 'ஸ்டான்போர்ட்' பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நைஜீரியா, உகாண்டா, ருவாண்டா, தான்சானியா மற்றும் மலாவி ஆகிய ஐந்து ஆப்ரிக்க நாடுகளின் இடங்களை பகல் நேரத்தில் செயற்கைக்கோள் உதவியோடு படம் பிடித்தனர். அதில் காணப்படும் சாலைகள், வீடுகளின் மேற்கூரை வகைகள், நீர்நிலைகளின் அமைப்பு, விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு கூறுகளை இதற்கென தனித்துவமாக உருவாக்கப்பட்ட தொழிநுட்ப கணினியில் பதிவேற்றினர்.

                            

    திரட்டப்பட்ட தகவல்களை இரண்டு வகையாக பிரித்தனர். முதலாவதாக பகலிலும், இரவிலும் வீடுகள் மற்றும் மனிதர்கள் வசிப்பதற்கான சுவடுகள் தென்பட்ட இடங்களில் புகைப்படம் எடுத்தனர். அப்போது அங்கு மின் விளக்கு வெளிச்சம் அதிகமாக இருந்தால் ஒருவகையாகவும், குறைவாக இருந்தால் மற்றொரு வகையென்றும் பிரித்து தகவல்களை சேகரித்தனர். இரண்டாவது முறையில் செயற்கைக்கோள் வரைபடமும், மின் விளக்கு வெளிச்சமும் மட்டுமல்லாது, அப்பகுதியில் உலக வங்கி மூலம் திரட்டப்பட்ட கணக்கெடுப்பு தகவல்களை கொண்டு இணைத்து சோதனை செய்தனர். இம்முறையின் மூலம் ஏற்கனவே தகவல் உள்ள இடங்கள் மட்டுமல்லாமல், அருகில் இருக்கும் வீடுகளின் வறுமை நிலையையும் துல்லியமாக கணக்கிட முடிந்தது.

      இம்முறையானது ஆப்ரிக்காவின் சில நாடுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவிலும் இதுபோன்ற ஆராய்ச்சி நடத்தினால், காலதாமதம் மற்றும்  வறுமை இடங்களை குறித்த தகவல்களும் வெளிப்படும். இதனால் அந்தந்த இடங்களில் வறுமையை போக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு இந்தியா முன்வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- ஜெ.சாய்ராம்.
 (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்