Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கின்னஸ்... சாதனைப் புத்தகம் உருவான கதை! 

                                        

ஆகஸ்ட் 27. இது உண்மையில் சாதனையாளர்களின் தினம். ஒரே மூச்சில் 151 எரியும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பவராக இருக்கட்டும்; உலகமே வியந்து பார்க்கும் ஓட்டப்பந்தய வீரர் ஹுசேன் போல்ட்டாக இருக்கட்டும்; 17,000 பாடல்களுக்கு மேல் பாடி அசத்திய பி.சுசீலா அம்மாவாக இருக்கட்டும்... அத்தனைபேரும் கொண்டாடவேண்டிய நாள்.  ஏனென்றால், இந்த தினம்தான் அவர்களுக்கான அங்கீகாரத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியது. 1955-ம் ஆண்டு, இதே நாளில்தான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்துபவர்களின் திறமையை ஆவணப்படுத்தப் போகிற ஒரு புத்தகம் முதன்முதலில் வெளியானது. அந்தப் புத்தகம், `தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்.’ இந்தப் புத்தகம் வெளியானதற்குப் பின்னணியில் ஒரு போட்டி இருந்தது என்பதுதான் ஆச்சர்யத் தகவல். 

                                        

அவர் பெயர் சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver). இங்கிலாந்துக்காரர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில், அவர்களின் காவல் பணியில் சேர்ந்து (1910) இந்தியாவில் பணியாற்றியவர். 1921-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திரும்பியவர், ஒரு இன்ஜினீயரிங் கம்பெனியில் வேலைபார்த்தார். பிறகு, கனடா அரசு அவருக்கு வேலை கொடுத்தது. அந்த நாட்டு துறைமுகங்களை மேற்பார்வை செய்யும் வேலை. கனடாவில் இருந்தபோது, ஏழு மாத காலம் நியூ பிரன்ஸ்விக் நகரத்தில் இருக்கும் செயின்ட் ஜான் துறைமுகத்தின் மறுகட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். துறைமுகத்தில் ஒரு பெரிய தீ விபத்து. அந்தப் பணியை விடவேண்டியதானது. பிறகு, வேறு ஒரு நிறுவனத்தில் வேலை, அரசுப்பணி என போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. 1946-ம் ஆண்டு, `ஆர்தர் கின்னஸ், சன் அண்ட் கோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார். அது, ஒரு பியர் தயாரிக்கும் தொழிற்சாலை. 

ஒருநாள் அயர்லாந்தில் நடக்கும் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். அது, நம் ஊர் விருந்து மாதிரி அல்ல. ஆங்கிலத்தில் `ஷூட்டிங் பார்ட்டி' (Shooting Party) என்று சொல்வார்கள். ஒரு ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ மக்கள், கூட்டமாகக் கூடுவார்கள். துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும். எல்லோரும் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். எது சிக்குகிறதோ அதைச் சுட்டுத் தள்ளுவார்கள். அன்றைக்கு ஸ்லேனி ஆற்றங்கரையில் ஷூட்டிங் பார்ட்டி. அங்கே ஒரு விவாதம். ஐரோப்பாவில் இருக்கும் பறவைகளில் வேகமானது எது... ‘கோல்டன் குளோவரா?’ (ஒருவகை ஆட்காட்டிக் குருவி) `கிரௌஸா?’ (சதுப்பு நிலத்தில் வாழும் ஒருவகைக் கோழி). விவாதத்தில் முடிவே கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது, இரு பறவைகளில் எது வேகமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; எந்தக் குறிப்புகளும் இல்லை; அது தொடர்பான ஒரு புத்தகம்கூட இல்லை. 

                                       

அதன் பிறகு ஹ்யூக்-குக்கு இதுபோல எத்தனையோ சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அதிக நேரம் தூங்கியவர் யார்; நீண்ட நேரம் பாடியவர் யார்... இப்படி பல கேள்விகள். தன்னைப்போல பதில் கிடைக்காமல் பலரும் இதுபோன்ற கேள்விகளோடு தவிப்பார்கள் என்பதும் அவருக்குப் புரிந்தது. இது தொடர்பாக ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்கு விற்பனையாகுமே, புகழ் பெறுமே என்கிற எண்ணமும் தோன்றியது. அதற்கு உதவினார் ஒருவர், ஹியூக்கின் கின்னஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். 'கிறிஸ்டோபர் சாட்டாவே' என்பது அவர் பெயர். கிறிஸ்டோபர், தன்னுடைய நண்பர்களான நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வ்ரிட்டர் இருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர்கள், லண்டனில் நிகழ்வுகளைக் கண்டுபிடித்து தொகுக்கும் ஒரு ஏஜென்ஸி நிறுவனத்தை நடத்திவந்தார்கள். இவர்களின் கூட்டு முயற்சியால் 1955-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி, 198 பக்கங்கள் கொண்ட முதல் ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகம் வெளியானது. 

கின்னஸ் என்பது ஓர் உயரிய அங்கீகாரம். சாகசம் புரிபவர்களுக்கு கிடைக்கும் கௌரவம். அப்படிப்பட்ட முதல் கின்னஸ் புத்தகம் வெளியான இந்த நாளை நாமும் கொண்டாடுவோம்! 

- பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement