அன்னை 'புனிதர்' ஆன கதை! #MotherTeresa

அன்னை தெரசாவை நேரில் பார்ப்பவர்கள் ' மதர், என் தலையில் கை வைத்து ஆசிர்வதியுங்களேன்... '! என்று ஆசையுடன் கேட்பார்கள். அப்படி கேட்பவர்களிடம், ஒரு பேப்பரில் 'கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்' என எழுதி, அதற்கு கீழே அவர்களை கையொப்பம் இட சொல்வார் மதர். தன்னிடம் ஆசி கேட்பவர்களிடம் 'இந்த பேப்பரை நான் கடவுள் கரங்களில் ஒப்படைந்து விடுகிறேன்' என சொல்வது அன்னையின் வழக்கம். அன்னை மறைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டது.

ஒரு வெள்ளிக்கிழமையில்தான் அவர் மறைந்தார். அதனால், கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆப் சாரிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பிரார்த்தனை வெகு பிரசித்தம். இந்த பிரார்த்தனைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அன்றைய தினம் , அன்னையின் கல்லறை அருகே வைக்கப்பட்டிருக்கும் 'கண்ணாடிப் பெட்டி ' பேப்பர்களால் நிரம்பி வழியும். பிரார்த்தனைக்காக வருபவர்கள் இப்போதும் அன்னை, 'தங்களுக்காக கடவுளிடம் இறைஞ்சுவதாக நம்புகிறார்கள்'. மக்கள் மனதில் என்றோ புனிதத்தன்மை அடைந்து விட்டவருக்குதான் வாட்டிகன் நாளை 'புனிதர்' பட்டம் வழங்குகிறது.

கடந்த 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனியாவில் பிறந்த மதர் தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. சிறு வயதில் இருந்தே ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதுதான் ஆக்னசின் லட்சியம். பிரான்சை சேர்ந்த தெரசா மார்ட்டின், மதரைப் போலவே சேவையில் நாட்டம் கொண்டவர். அன்னை பிறப்பதற்கு முன்பே, ஏழைகளுக்கு சேவை புரிந்து  இளம் வயதில் காசநோயால் மறைந்து விட்டவர்.

 

சிறுவயது ஆக்னசுக்கு அந்த தெரசாதான் 'இன்ஸ்பிரேசன்' . அவரைப் போலவே தானும் பிற்காலத்தில் மாற உறுதி பூண்டார். 1929ம் ஆண்டு இந்தியா வந்த ஆக்னஸ், டார்ஜிலிங்கில், கன்னியாஸ்திரியாக துறவறம் ஏற்றார். பின்னர், தெரசா மார்ட்டின் நினைவாக, தனது பெயரையும் தெரசா என மாற்றிக் கொண்டார்.  கடந்த 1950ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி  கொல்கத்தா நகரில் 'சாரிட்டி ஆப் மிஷனரிஸ்' அன்னையால் தொடங்கப்பட்டது. அவரது சேவைகளுக்கு விளக்கம் தேவையில்லை.

மதருக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள். ஒன்று ஆசியைப் பணி. மற்றொன்று அறப்பணி. மூச்சு அடங்கும் வரை, இவற்றை அவர் கைவிடவில்லை. அதற்காக மதர் எப்போதுமே சீரியசாக இருப்பார் என்று நினைத்து விடாதீர்கள்.சிரித்த முகத்துடன்தான் காணப்படுவார். அருகில் இருப்பவர்களை 'ஜோக்' அடித்தும் சிரிக்க வைப்பார்.  யாராவது ஜோக் அடித்தால், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு சிரிப்பது மதரின் வழக்கம். தனது பால்ய சினேகிதிகளை கண்டு விட்டால்,மதரை கையிலேயே பிடிக்க முடியாது. பழைய நினைவுகளை ஒன்று விடாமல் அவர்களிடம் அசை போடுவார்.

உலக மக்களை மட்டுமல்ல,தன்னை சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் அக்கறை காட்டுவதில் மதருக்கு நிகர் மதர்தான். தனிப்பட்ட முறையில், யாராவது உதவி கேட்டால், அடுத்த விநாடி கேட்ட உதவி நிறைவேற்றப்படும். ஒருமுறை, கொல்கத்தாவில் பணியாற்றிய அருட் தந்தை டொமினிக் கோமசை, ரோம் சென்று மேற்படிப்பு படிக்க வாட்டிகன் உத்தரவிட்டது. பல முறை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து பார்த்தார் கோமஸ். யார் யாரையெல்லாமோ போய் சந்தித்தார். காரியம் நடக்கவில்லை. சோர்ந்து போய் மதரிடம் வந்து நின்றார். முகத்தை பார்த்தே கண்டுபிடிக்கும் வழக்கம்தான் மதரிடம் உண்டே. 'என்ன பிரச்னை உனக்கு என்றார்?'.டொமினிக் விஷயத்தை சொல்ல, 'எல்லா டாக்குமன்டுகளையும் என்னிடம் கொடுத்து விட்டு நாளை வந்து பார் ' என மதர் கூறினார். அடுத்த நாள், மதரிடம் சென்ற டொமினிக்கிற்கு பாஸ்போர்ட் தயாராக இருந்தது.

அடுத்தவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்திய மதர், தனது உடல்நலனில் அக்கறை கொண்டதே கிடையாது. மதருக்கு இதய நோயின் தாக்கம் இருந்த நேரத்தில், ஃபேஸ்மேக்கர் பொருத்த வேண்டுமென டாக்டர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.  'மாடிப்படி ஏறவே கூடாது’ என்றும்  உத்தரவு போட்டிருந்தார்கள். அந்த சமயத்துல, வங்கதேசத்துல இருந்து, மதருக்கு போனில் அழைப்பு. போனை வைத்த அன்னை, 'வங்க தேசத்துல புயலாம். நான் உடனே அங்கே போய் ஆகனும். ஏற்பாடு பண்ணுங்கனு சொல்ல, அருகில் இருந்தவர்கள், 'டாக்டர் மாடிப்படியே ஏறக் கூடாதுனு சொல்லிருக்காங்க. நீங்க, வங்க தேசம் போறேனு சொல்றீங்கனு கேள்வி எழுப்பினர். 'அதெல்லாம் போய்ட்டு வந்து சொல்லிக்கலாம் ' என அன்னையிடம் இருந்து பதில் வந்துள்ளது யார் சொல்லியும் கேட்கல வங்கதேசம் போய்ட்டு வந்துட்டுதான் மறு வேலை பார்த்திருக்கிறார்.

 

அப்பேதெல்லாம், மிஷனரிஸ் ஆப் சாரிட்டியில், கன்னியாஸ்திரிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை. ராகுல்ராய் என்ற போட்டோகிராபர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, மூன்று கன்னியாஸ்திரிகளை படம் எடுத்தா. அப்போது, அன்னையும் ஆலயத்தில் இருந்தார். பிளாஷ் வெளிச்சம் வர,போட்டோகிராபரை பார்த்து  'ஹலோ நீங்க என்ன செய்றீங்கனு கேட்டார்... அதற்கு ராகுல்ராய், 'பிரார்த்தனையில் இருக்கிற மூன்று கன்னியாஸ்திரிகள் என் கண்களுக்கு ஏஞ்சல்களாகவேத் தெரிகின்றனர்'' என சமாளித்தார். மதரை கவரும்விதத்தில் பதில் இருந்ததால் கண்டிப்பில் இருந்து தப்பி விட்டார்.

கடந்த 1964ம் ஆண்டு போப் ஆண்டவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த, லிண்டன் ஜான்சன், போப் ஆண்டவருக்கு பரிசாக காண்டினென்டல் காரை பரிசாக அனுப்பி வைத்தார். அந்த காரை, போப் ஆண்டவர் அன்னைக்கு பரிசாக வழஙக, அதனை ஏலம் விட்டு, அந்த பணத்தை அறக்கட்டளையில் சேர்த்தார். கன்னியாஸ்திரியாக மாறிய பிறகு நீலக் கறையிடப்பட்ட சாதாரண வெண் புடவையைத் தவிர வேறு எதையும் உடுத்த மாட்டார்.

பத்மஸ்ரீ  முதல் நோபல் பரிசு வரை வென்று விட்டார். 'ஏழைகளுக்கு சேவை என்ற பெயரில் மதமாற்றம் செய்தார்’ என்பது இவர் மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு. ' மதர் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் கண்டெடுத்த அத்தனை பேருமே கடவுளின் குழந்தைகளாகத்தான் அவர் பார்த்தார்'' என்கிறார் மதர் தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நவீன் பி.சாவ்லா.

கடந்த 1997ம் ஆண்டு, தனது 87வது வயதில் மதர் தெரசா மறைந்தார். ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக புனிதர் பட்டத்தை அளிக்க வேண்டுமென்ற கத்தோலிக்க மக்கள் கோரி வந்தனர். அதற்கு இரு அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்று வாட்டிகன் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2003ம் ஆண்டு மதர் தெரவாசாவுக்கு 'அருளாளர்’ பட்டத்தை வாட்டிகன் வழங்கியது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருந்தது. மதர் தெரசா உருவம் பதித்த சங்கிலி அணிந்து பிரார்த்தனையில் ஈடுபட்டதால், புற்று நோய் குணமடைந்தது. இதனால் முதலில் 'அருளாளர்' பட்டம் வழங்கப்பட்டது.

இரண்டாவதாக, பிரேசில் நாட்டில் மூளைக் காய்ச்சல் காரணமாக கோமா நிலையை அடைந்தவரை மதர் தெரசா குணப்படுத்தியதாகவும், நோயாளியின் குடும்பத்தினர் மதர் தெரசாவை பிரார்த்தித்து குணம் பெற்றதாகவும் கூறினர். இரு அற்புதங்களையும் கணக்கில் கொண்டு, போப் பிரான்சிஸ் மதருக்கு 'புனிதர்' பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார்.

'ஒவ்வொரு மனிதர்களிலும் நான் கடவுளை பார்க்கிறேன். தொழுநோயாளியைத் தொடும்போது இறைவவனைத் தொடுவதுபோல் உணர்கிறேன்...!' என்ற மதர் தெரசா, மதங்களை கடந்து உலகத்துக்கே பொதுவானவர்!

-எம். குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!