Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகம் போற்றும் 'ஒரு பூமியின் தேவதை' அன்னை தெரசா!

கடல் கடந்த கருணை நதி ஒன்று...
என் தேச மக்களை துயரிலிருந்து காத்தது
வழிநடத்திச் சென்றது..
அவள் நடந்தது 'நதி நடந்த பாதை' என யார் சொன்னது..,
அவை அனைத்தும் 'முள் முளைத்த சாலைகள்' என,
அவளை தரிசித்தவர்கள் சொல்வதுண்டு..

மேனியை உருக்கும் மெழுகுதிரி வாழ்க்கையாய், தன்னை உருக்கி பிறருக்கு ஒளி தரும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த மகத்தான ஒரு மாமனிதர் அவர்..

யூகோஸ்லாவியாவில் பிறந்த 'அன்னப் பறைவை'யாக இருந்தாலும், வாழ்கிற காலத்தில் தம்மைச்சுற்றிய பத்துப் பேருக்காவத பயனுள்ள வகையில் வாழ முடிவெடுத்தார். பிறருக்காக வாழ்ந்துவிட்டுப் போகவில்லையென்றால், அது என்ன வாழ்க்கை என்று அவர் யோசித்தாள்.

தான் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டுப் போகிறவளாக வளர்ந்துவிடக் கூடாதென்பதில், தன் வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வளரத் தொடங்கினாள். தன் வாலிபத்தை வருத்தத் தொடங்கினாள்,
படுக்கையில் முடிந்துபோகிற தேகத்தில் வாழ விரும்பவில்லை. பால்யத்தை உதரிவிட்டு இறைமை என்னும் பருவத்தின் வாசலில் மடந்தையாய் மலர்ந்து நின்றாள்.

தூக்கம் என்பது, அவளது கட்டிலுக்கு எப்போதோ வந்துபோகிற விருந்தாளி மாதிரியாகிப்போனது. நெருப்பைக்கொண்டா நெஞ்சைத் தொடுவது? என.. தனது சிந்தனை ஓட்டத்தை நிறைவு செய்தாள். 18 வயதில் குடும்பத்தை பிரிந்து... தன் நாடு கடந்து, அந்த அல்பேனிய அன்னப் பறவை 'இந்தியா' வந்து சேர்ந்தது.

அந்த அன்னப்பறவை, தன் மனதில் 'இயேசுவை மாத்திரமே நெஞ்சில் வைத்துப் பூஜித்தாள்' என்பதே யதார்த்த உண்மை. மனசு முழுக்க.. 'இயேசு என்னும் இறைமை' இருந்ததால் மட்டுமே, அவள் இந்தியா வந்தாள், அவளாள் வர முடிந்தது.

இந்தியாவின் கொல்கத்தா நகரமெங்கும், அவள் திரும்பிய திசையெல்லாம் திகைத்து நின்றாள்.. அதற்குக் காரணம்...

மனிதனே மனிதனை நேயம் கொள்ள மறுக்கும் மாபெரும் நோய்... பாதி மேனியில் மீதி வாழ்க்கையை நடத்தும் மனிதப் பிறவிகள்... பெற்றவர்களை இழந்த பேதைகள்... குப்பைகளில் பெரும்பாலும் குழந்தைகள்...

இரவிலே ஓர் உறவிலே மனித ஜனனம்.. வாழ்விலே பல வழியிலே மனித மரணம்!

...என கொல்கத்தா முழுவதும் தென்பட்டன. போதாக்குறைக்கு... ஆண்டவன் படைத்த உயிர் ஒன்று தெருவுக்கு தெரு அநாதையாக இறந்து போயின.

..அதனால் கண்கள் கண்ட திசையெல்லாம், இதயம் இடறி விழுந்தது தெரசாவுக்கு. 'தன் வேர்களில் தண்ணீர் ஊற்றியவனுக்கு மட்டுமா நிழல் தருகிறது மரம்? இந்தியாவில்.. இதுதான் அன்னையின் வாழ்க்கையாக இருந்தது. அதனால், கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக மட்டுமல்ல, காயப்பட்டுப்போன மனிதனுக்கு மருந்தாகவும் அவள் இருந்தாள். அதனால், காலம் அவளை அன்னை தெரசாவாக உருமாற்றியது.

வறுமையின் வரப்புகளில் வாழ்க்கை நடத்துகிற, ஏழை மக்களின் முறைப்படுத்த முடியாத உணர்ச்சிகளுக்குள் உந்தப்பட்டுக் கருத்தரித்த பெண்கள், வளர்க்க முடியாமல் குப்பைகளில் வீசி விடுகிற பரிதாபகரமான சூழ்நிலைகளில் வருகிற குழந்தைகள்.. வறுமையும், வருவாய் இல்லாத வெறுமையும் சூழ்ந்த குடும்பத்தில் ஓடிப்போன கணவர்களாலும், தற்கொலை செய்துகொண்ட தாய்மார்களாலும், அநாதையாக்கப்பட்டு வருகிற குழந்தைகள் என.. எல்லோருக்கும் அடைக்கலம் தந்தாள், தான் இருந்த சபையின் விதிமுறைகளை மீறி செயல்பட்டாள்.

ஏழைகளுக்காவும், நோயின் பிடியில் சிக்கி.. மரணத்தைத் தவிர வேற எதையும் எதிர்பார்த்திராத மானுடனுக்கா.. உதவி செய்ய ஒருவர் கூட அப்போது முன்வரவில்லை. ஏழைகளுக்காக இறங்கிவர ஈரமனம் படைத்தவர்களைத் தேடுவதே பெரும் பிரச்சனையாக இருந்ததால், அவரே களத்தில் இறங்கி பணிவிடை செய்தாள். குழந்தைகளை பராமரிக்கவும், நோயாளிகளுக்கு மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டாள்.

ஏழைகளுக்காக கை ஏந்தினாள். ஆனால் பணம் படைத்தவர்களிடம் 'மனம்' இல்லாததால், அன்னையின் கையில் காசுக்குப் பதிலாக, 'எச்சில்'தான் நிரம்பி வழிந்து.. இருந்தது. "இந்த எச்சில் எனக்குப் போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார்". எச்சில் துப்பியவர்கள், அன்னையின் பொறுமையையும், கருணையையும் கண்டு கண் கலங்கி திடுக்கிட்டு நின்றார்கள்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நோயின் பிடியில் மரணத்தை எதிர் நோக்கிய அனைவருக்கும் தாயானாள். ஏழைகளை நெருப்பில் நடந்து நேசித்ததை, தேசத்தின் துரோகமாக சிலர் கருதினார்கள். பொதுசேவையில்கூட அரசியல் பார்த்த பலசாலிகள் சிலர், ஒரு பெண்.. அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்தவர், நமது நாட்டில் எப்படி சேவை செய்யலாம் என போர்க்கொடி தூக்கினார்கள். அன்னையின் ஆசிரமத்தில், அடியாட்களுடன் வந்து ரகளையில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் அன்னை தெரேசா சொன்னாள்..

"உங்கள் தாய்மார்களோ, அல்லது தங்கைகளோ இதே பணியை செய்வதாக இருந்தால், நான் இங்கிருந்து செல்ல தயார்". பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு கொடுங்கள், அதுபோதும் என்றாள் அன்னை. ஆர்ப்பரித்த கூட்டம் எல்லாம், சில நொடிகளில் கலைந்து சென்றது.

அன்னை தெரசாள், இந்தியா வந்த நோக்கம் வேண்டுமானால் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதாக இருக்கலாம். ஆனால் அவர் சேவையில் அது துளியும் இல்லை. மரணத்தின் பிடியில் இருந்தவர்களின் மன அமைதிக்காகத்தான் மதத்தைப் பயன்படுத்தினாள்.

அப்படிப்பட்ட ஒரு கருணை கடல்.. கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறைவனடி சேர்ந்துகொண்டது. உலகமே ஒரு தாய்க்காக கண்ணீர் விட்டது என்றால், அது அன்றைய தினம் தான்.

பின்னர் 2003ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால், மறைந்த அன்னை தெரசாவுக்கு 'அருளாளர்' பட்டமளித்து புனிதர் பட்டம் பெறுவதற்கான வழிமுறையைத் தொடங்கி வைத்தார். அன்னையின் சேவையை பாராட்டி, அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இன்று.. அவரது நினைவு தினத்தை ஒட்டி, அவரது சேவையை பாராட்டும் விதமாக வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ்.. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டத்தை முறைப்படி வழங்கினார். இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், எண்ணற்றோர் கலந்துகொண்டு புனிதர் பட்டமளிக்கும் விழாவினை சிறப்பித்தார்கள்.

இன்றும்.. உலகமே போற்றும் ஒரு பூமியின் தேவதையாகத்தான் அனைவருக்கும் காட்சி தருகிறாள் அன்னை தெரசாள்!

-ரா.வளன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement