Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மறைந்து 10 ஆண்டுகள் ஆனது; முதலை வீரனை மறக்க முடியுமா? #SteveIrwin

யானையின் லத்தியில் இருந்து தண்ணீர் குடிக்கும் பியர் கிரில்சுக்கெல்லாம் முன்னோடி ஸ்டீவ் இர்வின். 'மேன் VS வைல்டு'  அலற வைக்கும் ரகம் என்றால் 'குரோக்கடைல் ஹன்டர் 'நாடி நரம்புகளை முறுக்கேற்றி புல்லரிக்க வைத்துவிடும். கையறு நிலையில், வனத்தை எதிர்கொள்வது எப்படி என பியர் கிரில்ஸ் பாடம் எடுக்கிறார் என்றால், கையில் எதுவும் இல்லாமல் வன விலங்குகளை எதிர்கொண்டவர் ஸ்டீவ். சுற்றுச் சூழலுக்கும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் மதிப்பேயில்லாமல் போன காலக்கட்டத்தில்,  அவற்றுக்காகத் தங்கள் உயிரை பணயம் வைத்தவர்கள் இவர்கள். ஒருவருக்கு உயிர் அதிலேயே போய் விட்டது. ''நான் காட்டுக்குள் செல்லும் போது திரும்பி வருவது நிச்சயம் இல்லை '' என பியர் கிரில்ஸ் எப்போதும் சொல்வது உண்டு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வினின் பெற்றோரும் முதலை வேட்டைக்காரர்கள்தான்.  இர்வினின் பெற்றோர் குயின்ஸ்லாந்தில் பெரீவா என்ற இடத்தில் வனவிலங்குகள் சரணாலயம் நடத்தி வந்தனர். பெற்றோரிடம் இருந்துதான் அத்தனை விஷயங்களையும் இர்வின் கற்றார். 6 வயதில் மலைப்பாம்புகளை கையாண்ட இர்வின்,  9வது வயது முதல், முதலைகளை படித்தார். பனிரெண்டாவது  வயதிலேயே தந்தை பாப் மேற்பார்வையில், முதலையை பிடிக்க ஆரம்பித்தார் இர்வின்.

இர்வினின் மனைவி டெர்ரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். கடந்த 1991ம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற டெர்ரி, இர்வினின் வனவிலங்குகள் சரணாலயம் பற்றி கேள்விப்பட்டிருந்தார். இர்வினை கண்டதும் டெர்ரிக்கு காதல் பற்றிக் கொண்டது. 'இர்வினை பார்த்ததுமே எனக்கு டார்ஜான்தான் நினைவுக்கு வந்தார்' என டெர்ரி கூறுவார். காதல் மலர்ந்த  நான்கே மாதங்களில் திருமணத்தில் முடிந்தது. ஹனிமூனுக்கு போன இடத்திலும் இந்த தம்பதி முதலைகளைத் தேடுவார்கள். காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இரு குழந்தைகள். மூத்தவள் பிந்தி.  1998 ம் ஆண்டு பிறந்தாள். இப்போது 18 வயதான பிந்தியும் தந்தையைப் போலவே முதலை சாகசக்காரிதான். கடந்த 2003 ம் ஆண்டு இளையவன் பாப் ராபர்ட் பிறந்தான்.

இர்வினின் சாகச நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு,  'இப்படியெல்லாம் ஒரு மனிதன் விலங்குகளுடன் பயமற்று உலவ முடியுமா'  என்ற கேள்வி நிச்சயம் எழும் . 1990ம் ஆண்டு முதல் டிஸ்கவரி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இர்வினின் டாக்குமெண்டரிகள் மிரள வைத்தன. அனகோண்டா, மலைப்பாம்பு எல்லாம் குழந்தை போலத்தான் இர்வினின் கையில் இருக்கும். கடந்த 1996ம் ஆண்டு,  இர்வினின் 'தி குரோக்கடைல் ஹன்டர்' நிகழ்ச்சி முதன் முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பார்த்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இர்வினுக்கு உருவானார்கள். சுமார் 50 கோடி மக்களை 'குரோக்கடைல் ஹன்டர் ' நிகழ்ச்சி சென்று சேர்ந்தது.

ராபர்ட் ஒரு மாத குழந்தையாக இருந்த போது, அவனை கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் முர்ரே என்ற 6 அடி நீள முதலைக்கு ஸ்டீவ் இர்வின் உணவு வழங்கிய நிகழ்ச்சி,  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட, மக்கள் பதைப் பதைத்துப் போனார்கள். இர்வினுக்கு கண்டனங்கள் குவிந்தன. இர்வின் மன்னிப்பு  கேட்ட பின்னரே பிரச்னையின் தீவிரம் அடங்கியது. இப்போது,ராபர்ட்டும் தந்தை போலவே முதலை வீரானாகி விட்டான். ரத்தத்தில் ஊறிய விஷயம் அல்லவா... மாற்றி விட முடியுமா?

வாழ்நாள் முழுவதும்  சுற்றுச் சூழலுக்காகவும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றவும் இர்வின் உழைத்தார்.  'நான் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இறந்து விட வேண்டும்.. 'என ஒரு ஆசிரியர் நினைப்பார். 'நடித்துக் கொண்டிருக்கும் போதே எனது உயிர் போய் விட வேண்டும் ' என ஒரு நடிகர் சொல்வார். ஆனால், தான் நேசித்த துறையில் விரும்பிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மரணித்து விட்டார் ஸ்டீவ்.

கடந்த 2006 ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, ஆஸ்திரேலிய கடற்பகுதியில் 'ஆபத்தான கடல் விலங்கினங்கள்' பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கைமீன் (stingray)  மார்பில் கொட்டியதில், மரணத்தை தழுவினார் இர்வின். ஸ்டீவ் மறைந்து கடந்த செப்டம்பர் 4ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தந்தையின் நினைவு தினத்தில், ஆஸ்திரேலியாவில் முதலை ஒன்றை மீட்ட பிந்தி,'' நாங்கள் நிகழ்த்தும் அனைத்து சாகசங்களுக்கும் நீங்கள்தான் ஹீரோ அப்பா. எனது அன்பை விளக்க வார்த்தைகள் இல்லை'' என இன்ஸ்டாவில் பதிவிட்ட போதுதான், அந்த சாகச வீரனை நாம் மறந்து போனது நினைவுக்கு வந்தது!

-எம். குமரேசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement