மிஸ்.ஜப்பானான இந்தியப் பெண்...!

'மிஸ் ஜப்பான்' அழகிப்போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா யோஷிகாவா இந்த ஆண்டு மகுடம் சூட்டியுள்ளார். டிசம்பரில் நடக்கவிருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஜப்பானின் சார்பாக இவர்தான் கலந்துகொள்ளப் போகிறார். இந்நிலையில் ஜப்பானிய சோஷியல் மீடியாக்களில் இவரைப்பற்றி பெரும் விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இவர் ஒரு 'ஹாஃபு', அதாவது 'அரை ஜப்பானியர்' என இவரைப்பற்றி ஜப்பானியர்கள் ஆவேசப் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரியங்கா இந்திய அப்பாவுக்கும், ஜப்பானிய அம்மாவுக்கும் பிறந்தவர். கடந்த முறை மிஸ் ஜப்பானாகத் தேர்வு செய்யப்பட்ட அரியானா மியமாட்டோவும் கலப்பினப் பெண். தொடர்ந்து கலப்பினப் பெண்களே மிஸ் ஜப்பானாகத் தேர்வு செய்யப்பட்டதே அங்கே சர்ச்சைகள் எழக் காரணம். 'இந்த டீயில் நிறமில்லை' ரீதியில், பிரியங்கா ஜப்பானியப் பெண்கள் அளவுக்கு கலர் இல்லை, அழகில்லை என்றெல்லாம் கமென்ட்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. 2020-ம் ஆண்டில் ஒலிம்பிக் நடத்தவிருக்கும் நம் நாட்டில் இப்படிதான் நிறப் பாகுபாடு பார்ப்பதா என பிரியங்காவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. 'என் அப்பா இந்தியர். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அதற்காக நான் ஜப்பானியப் பெண் இல்லை என ஆகிவிடுமா? என்னுடைய நிறத்துக்காகப் பல இடங்களில் பாரபட்சமாக நடத்தப்பட்டிருக்கிறேன். என்னைத் தொட்டாலே ஏதோ கெட்ட பொருளைத் தொட்டது போல சிறுவயதில் காயப்படுத்தியிருக்கிறார்கள். இதை எல்லாம் தாண்டிதான் சாதித்திருக்கிறேன்' என பிரியங்கா இவர்களுக்குப் பதிலடி தந்திருக்கிறார். 

இன்னொரு முக்கியமான விஷயம் அழகிப்போட்டியில் வென்றதும், 'இனி நான் சமூகசேவை செய்யப்போகிறேன்' என்ற டெம்ப்ளேட் வசனம் பேசாமல், 'நிறப் பாகுபாட்டிற்கு எதிராக இதுவரை போராடி வந்தேன். இனியும் அதைத்தான் செய்யப்போகிறேன்' என ஸ்டேட்மென்ட் விட்டு எரியும் தீயில் அரை லிட்டர் பெட்ரோலை ஊற்றியிருக்கிறார் பிரியங்கா. கொசுறுச் செய்தி என்னன்னா... யானையைப் பழக்குவதற்கான முறைப்படியான லைசன்ஸ் பிரியங்காவிடம் இருக்கிறது. சின்னவயசில் இருந்து கிக் பாக்ஸிங்னா இவருக்கு உயிராம். 
உங்கள் போராட்டமும் அழகுதான் பிரியங்கா! 

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!