Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு நாட்கள்..மூன்று பயங்கரங்கள்! -வல்லரசை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு!

ல்லரசானாலும் வன்முறைக்கு சற்றும் சளைத்ததல்ல அமெரிக்கா. இமாலய பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தபோதிலும், அந்நாட்டில் பல துப்பாக்கிச்சூடுச் சம்பவங்களும் கொலையும், கொள்ளையும் தினமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. 2015-ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் வன்முறை 1.6% வரை அதிகரித்திருக்கிறது. நிமிடத்துக்கு ஒரு கொள்ளை. மாதத்துக்கு ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சத்தம் என்று பழக்கப்பட்டுவிட்ட அமெரிக்காவுக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்தது தொடர் குண்டு வெடிப்பு.

அதிர்ந்த மான்ஹாட்டன்

செப்டம்பர் 11 இரட்டை கோபுரத்தாக்குதலின் பதினைந்தாம் ஆண்டு நினைவு தினம் கடந்து சென்று விட்ட சிலநாட்களில் கடந்த 17-ம் தேதி காலை 9.29 நிலவரப்படி அங்கு கடைசியாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு பாஸ்டன் நகரில். 9:30 மணிக்கு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை விட மோசமாக இருந்தது.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரில் உள்ள அமெரிக்க கப்பற்படை அலுவலகம் அருகே இருந்த பார்க் ஒன்றின் குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குழாய் குண்டு வெடித்தது. அதேநாள் இரவு சுமார் 8:30-க்கு வெஸ்ட் 23-வது தெருவில் ஒரு பிரஷர் குக்கர் குண்டு வெடித்தது. இதற்கு நான்கு தெருக்கள் தள்ளி 27-வது தெருவில் வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு, வெடிக்கும் முன்பு செயலிழக்க வைக்கப்பட்டது. இது தொடர்பான பதட்டம் போதாதென்று மறுநாள் நியூஜெர்சியின் எலிசபெத் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு பை நிறைய குண்டுகள் கண்டெடுக்கப்படுகிறது. இதற்குப் பின்னர் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப், ட்விட்டர் சமூக வலைத்தளத்திலும் குண்டு வெடிப்புகளைப் பற்றியே அதிகம் விவாதித்துத் தீர்த்தார்கள்.
கடற்படைதளம் அருகே வெடித்த குண்டு சற்று நேரம் தாமதித்து வெடித்து இருந்தாலும் கூட அங்கே நடைபெற இருந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கவிருந்த சுமார் 3000 பேரில் பலரின் உயிரைக் குடித்திருக்கும். ஆனால் வெறும் 31 பேர் மட்டும் சில காயங்களுடன் தப்பினர். மற்றொரு குண்டு, விடுதிகள், உணவுக் கூடங்கள் நிறைந்த எப்போதும் மக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதியில் வெடித்தது.
குண்டு வெடித்த மறுநாளே அஹ்மத் கான் ரஹாமி என்கிற 28 வயது அமெரிக்க வாழ் ஆப்கானிய நபரைக் கைது செய்தது அமெரிக்க புலனாய்வுத் துறை.

யார் இந்த ரஹாமி?

இவரின் குடும்பத்தைப் பற்றி 'இப்படியெல்லாம் கூட நடக்குமா?' என்று சிந்திக்கும் வகையிலான சில தகவல்கள் கிடைக்கின்றன. ஆப்கான் அகதியான ரஹாமியின் தந்தை 2000-வது ஆண்டிலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். நியூ ஜெர்சியின் எலிசபெத் நகரத்தில்தான் தொடர்ந்து வசித்திருக்கிறார். ரஹாமியின் பள்ளிக்காலம் முழுதும் அமெரிக்காவில்தான் கழிந்திருக்கிறது. தன் குடும்பம் நடத்திய 'பர்ஸ்ட் அமெரிக்கன் ஃப்ரைட் சிக்கன்' என்னும் உணவகத்திலேயே வேலை செய்துள்ளார். எலிசபெத் நகரத்து மக்கள் மீது ரஹாமியின் தந்தை 2011-ல் வழக்கு தொடர்ந்தார். அதில் 'இந்நகர மக்கள் எங்களுக்கு எதிராக இருக்கின்றனர். எங்களது பூர்வகுடியைக் குறிப்பிட்டு எங்களை ஒதுக்கின்றனர்' என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பதிலுக்கு பொதுமக்கள், இவரது உணவகத்தைப் பற்றிப் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நியூஜெர்சி நீதிமன்றம் இவரது உணவகம் உட்பட சில வணிக நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மேல் திறக்கக் கூடாது எனத் தீர்ப்பளிக்கிறது. இதன் பிறகு 2014-ல் கத்தியால் ஒருவரைக் காலில் குத்தியது, போலீஸைத் தாக்கியது ஆகியவற்றுக்காக, ரஹாமி சிறை வைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

2011 முதல் 2014 இடையிலான காலகட்டத்தில்தான் ரஹாமியிடம் அவரது நண்பர்கள் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். ஆப்கான் அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் வசிப்பதால் ரஹாமி அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். அங்கே, முன்னாள் தாலிபான் தீவிர வாதிகள் சிலருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். 2013-ல் ரஹாமிக்கும் பாகிஸ்தான் வாழ் ஆப்கானிய அகதிப் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 2014 தொடக்கம் வரை இருவரும் ஆப்கானில் இருந்துள்ளனர். பின்னர் அமெரிக்கா திரும்பிய ரஹாமி, இப்போது பெரும் வன்முறையை நிகழ்த்தி இருக்கிறார் என்று கூறுகின்றனர். கைது செய்யப்படபோது ரஹாமியின் நாட்குறிப்பு கைப்பற்றப்பட்டது. அதில், அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை பற்றிய குறிப்பு இருந்தது.இவர் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தற்கொலைப்படை தீவிரவாதி. மேலும் அந்த நாட்குறிப்பில் ' கில்லிங் கஃபீர்' என்கிற வாசகமும் இருக்கிறது. கடவுளின் மீது நம்பிக்கையற்றவர்களை கொல்லுவோம் என்பது அதன் பொருள். இதையெல்லாம் தடயங்களாக வைத்துத்தான் இது அல்கொய்தாவின் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகித்துள்ளது அமெரிக்க புலனாய்வுத் துறை.

ஆனால் அமெரிக்க அரசு மற்றும் அதன் பாதுகாப்புப்படை முன் நிற்கும் கேள்வி இதுதான். வல்லரசுக் கனவுகளோடு, தொடர் அந்நிய அக்கிரமிப்புகளுக்குப் பொதுமக்கள்தான் பணயமாக்கப்பட வேண்டுமா?

-ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement