Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முடிவுக்கு வருகிறது ‘மிஷன் ரொசெட்டா’...இன்னும் 7 நாட்களில் எண்ட் கார்ட்!

 

இன்னும் ஏழே நாட்கள்....உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஐரோப்பிய விஞ்ஞானிகளின் 12 ஆண்டுகால விண்வெளி வரலாறு ஒன்று முடிவடைய போகிறது.


விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக வால் நட்சத்திரம் ஒன்றை ஆய்வு செய்யும் வகையில் விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் ‘ரொசெட்டா’வின் கடைசி மணித்துளிகள் இது. 2004 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 2-ம் தேதியன்று 67பி சுரியுமொவ்-கெராசிமென்கோ என்னும் வால்நட்சத்திரத்தை ஆய்வு செய்ய ஆரியாயான் செயற்கைக்கோள் மூலமாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது ரொசெட்டா.

ரொசெட்டாவின் இந்த வால்நட்சத்திர சுற்றுலாப் பயணம் தற்போது முடிவுக்கு வருவதற்கு முக்கிய காரணம் ‘சூரியன்’. பேட்டரியில் திறன் தீர்ந்த நிலையில், கடைசி கட்டத்தில் சோலார் எனர்ஜி மூலமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது ரொசெட்டா. இந்நிலையில், தன்னுடைய சுற்றுவட்டப் பாதையில் சூரிய ஒளியிலிருந்து பல ஒளியாண்டுகள் தூரம் சென்று விட்டது. அதனால்,ரொசெட்டாவின் ஆயுட்காலத்தை முடித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ஐரோப்பிய விஞ்ஞானிகள். 

ஏற்கனவே போதுமான அளவிற்கு ரொசெட்டாவும் அதன் கூடவே ஒட்டிக் கொண்டுச் சென்ற ஆய்வுக் கலமான ஃபைலியும் 67பி சி-ஜி குறித்த புகைப்படங்களையும், ஆய்வு முடிவுகளையும் ஓசிரிஸ் கேமராவின் துணையுடன் பூமிக்கு அனுப்பியுள்ளன. 

ஃபைலி, வால்நட்சத்திரத்தின் மேற்பரப்பில் தரையிறங்கி இரண்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. ஒன்று வால் நட்சத்திரத்தின் மேற்பகுதியில் துளையிடுதல், மற்றொன்று தன்னைத் தானே சுழற்றிக் கொண்டு இயங்கத் தேவையான சூரிய வெளிச்சத்தைப் பெறுதல். இந்த ஃபைலி கலத்தின் முழுக்கட்டுப்பாடும் ரொசெட்டாவின் கைகளில் இருந்தது. இந்நிலையில் ஆண்டாண்டு காலமாக சுற்றிச் சுற்றி வலுவிழந்துவிட்ட ரொசெட்டா விண்கலத்தை வால் நட்சத்திரப் பரப்பில் மோத வைப்பதன் மூலமாக அதுகுறித்த மேலும் பல தகவல்களையும், 67பியில் அமைந்திருக்கும் பாறைகளின் உராய்வுத்தன்மை போன்றவற்றையும் கண்டறிய முடியும் என்ற விஞ்ஞான மூளைகளின் ஐடியாவின் விளைவுதான் இந்த ‘ரொசெட்டா மிஷன் அக்கம்பிளிஷ்டு’.

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 6 ஆம் தேதியன்று 67பி வால்நட்சத்திரைத்தை நீண்ட, நெடிய பயணத்திற்குப் பின் சென்றடைந்தது ரொசெட்டா. உருளைக்கிழங்கு வடிவில் தோற்றமளித்த 67பியையே சுற்றிச் சுற்றி வந்த ரொசெட்டா, அதன் புகைப்படங்களையும், அளவீடுகளையும் எடுத்துத் தள்ளியது. ஒருவழியாக நவம்பர் 12, 2014ல் ஃபைலியைத் தன்னிடமிருந்து பிரித்த ரொசெட்டா  அதை 67பி சுரியுமொவ்-கெராசிமென்கோவின் மேற்பரப்பில் ஆய்விற்காக இறக்கியது. இந்நிலையில் இரண்டு வருட ஆய்வுக்களுக்குப் பின் ரொசெட்டாவின் முடிவு நெருங்கியுள்ளது.

செப்டம்பர் 29ம் தேதி, ரொசெட்டாவிற்கு கடைசியாக அனுப்பப்படும் கட்டளைகள் அதில் மீதமிருக்கும் எரிசக்தியையும் தீர்த்து, 15மணி நேரத்திற்கு 20 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து கீழ் நோக்கி விழச்செய்யும். கடைசியாக ஒரு சராசரி மனிதனின் நடைப்பயிற்சி வேகத்தில் வால் நட்சத்திரத் தரைப்பகுதியை மோதும் ரொசெட்டா. செப்டம்பர் 30 அன்று முழு முடிவும் தெரிந்துவிடுவதுடன், ஃபைலும் க்ளோஸ் ஆகிவிடும். இதே Control+Alt+Delete மெத்தட்தான் ஃபைலிக்கும்.

ரொசெட்டாவினை உயிரிழக்கச் செய்வதற்கு ஐரோப்பிய வான்வெளி ஆராய்ச்சி மையம் இரண்டு காரணிகளைக் கூறியுள்ளது. ஒன்று...ஒரே அடியாய் எரிசக்தி தீர்ந்து பூமியில் விழும் ரொசெட்டாவின் பாகங்கள் கடலில் மிதக்கத் தேவையில்லை.இரண்டாவது....ரொசெட்டா விண்கலம் வால் நட்சத்திரத்திலேயே மோதும்போது, 67பியின் தன்மை, பாறை, கற்பகுதி குறித்த மேலும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். 

ரொசெட்டா மறைந்தாலும் இரண்டு முக்கிய நினைவுகள் நம்மிடையே மீதமிருக்கும்...முதன்முதலில் வால் நட்சத்திரம் ஒன்றின் சுற்றுப் பாதையில் நுழைந்த விண்கலம், முதன்முதலில் வால் நட்சத்திரப் பரப்பில் ஆய்வுக்கலத்தை தரையிறக்கிய விண்கலம்....ஆகிய பெருமைகள் ரொசெட்டாவிற்கு மட்டும்தான். இதை முறியடிக்க நமக்கு இன்னும்  12 ஆண்டுகள் தேவைப்படலாம்!

போய்வா ரொசெட்டா..பை..பை!

-பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement