பாகனைக் காக்க ஆற்றுக்குள் குதித்த யானை! (video)

ஓடும் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த தன்னுடைய பயிற்சியாளரை யானை ஒன்று காப்பாற்றிய சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில்  ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்கு ஐந்து வயதான காம்லா எனும் யானை குட்டி வளர்ந்து வருகிறது. காம்லா யானைக்கு டெரிக் தாம்சன் என்பவர் பாகனாக இருக்கிறார். மனிதர்களை விட விலங்குள் நல்லவை. துன்பத்தில் மனிதனுக்கு கைக் கொடுக்கக் கூடியவை அவற்றுக்கு மனிதர்கள் துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதை உணர்த்த இந்த யானைகள் சரணாலயம் முடிவு செய்தது. அதனை நிரூபிப்பதற்காக யானைகள் மனிதர்களிடம் எவ்வளவு பாசமாக இருக்கின்றன என்பதை உலகுக்கு காட்டுவதற்காக ஒரு டெஸ்ட் வைத்து அதனை வீடியோவா பதிவு செய்து வெளியிட  முடிவு செய்யப்பட்டது.

 

 

டெரிக் தாம்சனிடம் உனது யானை உன் மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறது என்று பார்க்கலாம் என ஒரு ஐடியா கொடுக்கப்பட்டது. அதன்படி, சரணாலயத்தில் உள்ள ஆற்றில் டெரிக் தாம்சன் குளித்துக் கொண்டிருக்கும்போது, வெள்ளம் தன்னை அடித்துக்கொண்டு செல்வது போல, நடித்தார். அதனைக் கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காம்லா யானை உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்தது. தண்ணீருக்குள் ஓடிச் சென்று பாகனை மீட்டது. இதனை பார்த்த சரணாலயத்தில் அதிகாரிகள் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

டெர்ரி, '' சிறுவயதில் இருந்தே காம்லா எனது பராமரிப்பில்தான் உள்ளது. அதன்மீது நான் அளவு கடந்த அன்பும் வைத்திருந்தேன். அதுவும் என்மீது அன்பு வைத்திருக்கிறது'' என்கிறார் நெகிழ்ச்சியாக. தற்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூயார்க் டைம்சில் இருந்து சிஎன்என் வரை நேற்று காம்லா யானைதான் நேற்று ஹீரோ.

அண்மையில் இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில்  164 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்வத்தின்போது, அதிரடிப்படையினருக்கு 'சீசர்' என்ற லெப்ரடார் வகை மோப்ப நாய் உதவியாக இருந்தது. இந்த சம்பவத்தின்போது,  சீசர் ஆற்றிய சேவையால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்ற  சீசர் தனது நண்பர்கள் சுல்தான், மேக்ஸ், டைகர் ஆகியவற்றுடன் ஒரு பராமரிப்பு மையத்தில் இருந்தது அதன் நண்பர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போயின. இதனால் மன அழுத்தத்துக்குள்ளான சீசரும் நோயுற்று கடந்த வியாழக்கிழமை இறந்தது.

சீசர் இறந்த பிறகு, நடந்த சம்பவங்கள்தான் நெகிழ்ச்சியானவை.  ஒரு மோப்ப நாய் இறந்ததற்கு மும்பை மாநகர கமிஷனர் தத்தா பாட்லாசீகரே ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். அத்துடன் சீசர் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல ஏராளமான போலீஸ் அதிகாரிகள் சீசரின் காலையும் தொட்டு வணங்கினர்.  'சல்யூட்' அடித்து சீசருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இறந்துபோன விலங்கு ஒன்றின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகிறார்கள் என்றால், சீசர் எத்தகையை சேவையை ஆற்றியிருக்கும்?

ஆனால்,மனிதர்கள் என்ன செய்கிறோம். யானை செல்லும் பாதையில் சுவர் கட்டி, அதன் வலசையை ஒழிக்கிறோம். காடுகளை அழிக்கிறோம். மின்வேளியில் மின்சாரம் பாய்ச்சி யானைகளைக்  கொல்கிறோம். நாய்களை மொட்டை மாடியில் இருந்து வீசுகிறோம்.

மனிதர்கள் தங்கள் செய்கைகளால் விலங்குகளாகி வரும் வேளையில், விலங்குகள் தெய்வமாகி வருகின்றன!

 - எம். குமரேசன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!