போலிகளுக்கு எதிரான  கூகுள் - ஃபேஸ்புக்கின் போர் வியூகம் என்ன? #WarAgainstFakeNews | Facebook and Google make a war against Fake news

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (21/11/2016)

கடைசி தொடர்பு:16:59 (21/11/2016)

போலிகளுக்கு எதிரான  கூகுள் - ஃபேஸ்புக்கின் போர் வியூகம் என்ன? #WarAgainstFakeNews

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் ''அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு போப் ஆண்டவர் ஆதரவு'' 

''ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்ற ஹிலரி கிளின்டனின் பல மோசடிகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ்!''

''கிளின்டன் அறக்கட்டளை சட்டத்துக்குப் புறம்பாக $137 மில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளது''

இந்த மூன்று செய்திகளை கடக்காமல் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். இவையெல்லாம் உண்மை என்று ஒரு பகுதி மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் பொய்யான போலி செய்திகள் தான். இந்த வதந்திகள் ஃபேஸ்புக்கில் கிளம்பிய போது இவை தான் உலகின் வைரல் செய்திகள். 

 நாளுக்கு நாள் இணையத்தில் அதிகரித்து வரும் போலியான செய்திகளால் அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள மற்ற நாடுகளிலும் பெரும் பிரச்னையை சந்தித்து வரும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்  ஆகிய இரண்டு டெக் உலக ஜாம்பவான்களும் அதற்கு எதிரான போரை வெவ்வேறு வழிகளில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 பிரபலமற்ற இணையதளங்களில் இருந்து வெளியான இந்த செய்திகளை அமெரிக்க மக்களில் பலரும் உண்மையென நம்பி தங்கள் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களிலும், வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி செயலிகளின் மூலமும் பகிர்ந்துள்ளனர். மேலும் இது போன்ற போலியான செய்திகள் கூகுளின் பிரபல சேவையான  “கூகுள் நியூஸில்” முதன்மையான இடத்தை பெற்றது மிகுந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையையும், கேள்விகளையும், சர்ச்சைகளையும் அமெரிக்காவில் எழுப்பியுள்ளது.

உண்மையான செய்திகளை தோற்கடித்த போலிச் செய்திகள்!

பிரபல சர்வதேச ஆங்கில செய்தி ஊடகமான Buzzfeed நடத்திய ஆய்வின்படி, கடந்த மூன்று மாதத்தில் அமெரிக்க தேர்தல் குறித்த வாஷிங்டன் போஸ்ட், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற 19 முன்னணி பத்திரிகைகளின் முக்கியமான 20 செய்திக் கட்டுரைகள் 7,367,000 லைக்குகள், ஷேர்கள் மற்றும் கமென்ட்களை பேஸ்புக்கில் பெற்றிருந்ததாகவும், அதே காலக் கட்டத்தில் பிரபலம் இல்லாத இணையத்தளங்களின் 20 போலிச் செய்திகள் உண்மையான செய்திகளை விட அதிகமாக அதாவது 8,711,000 லைக்குகள், ஷேர்கள் மற்றும் கமென்ட்களை பேஸ்புக்கில் பெற்றுள்ளது என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. 

தேர்தல் முடிவுக்கு இந்த போலிச் செய்திகளும் காரணமா?

கடந்த நவம்பர் 8-ம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியவுடனேயே போலிச்செய்திகள் குறித்த விஷயம் பூதாகரமாக தொடங்கியது. டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு இந்த போலியான செய்திகளே வித்திட்டன என்றும், ஃபேஸ்புக்  மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் திட்டமிட்ட செயலாலேயே இது நடந்தேறியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏனெனில் அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் தினசரி செய்திகளுக்காக இணையத்தையே சார்ந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக மாசிடோனியா குடியரசின் வெல்ஸ் என்னும் சிறிய நகரில் மட்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 140 போலிச்-செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவை அந்நகரத்தை சேர்ந்த இளைஞர்களால் வருமானத்துக்காகவும், வேடிக்கைக்காகவும் செய்யப்படுவதாக அறியப்பட்டாலும் அது அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஒபாமா, “தற்போது தவறான தகவல் அளிக்கும் செய்திகளானது உண்மையான செய்திகளை போன்று நேர்த்தியான முறையில் நமது பேஸ்புக் பக்கத்தையும், தொலைக்காட்சியிலும் ஆக்கிரமிக்கிறது. எவ்வித வேறுபாடும் இல்லாமல் இரு விதமான செய்திகளும் இருந்தால், அதில் எதை பாதுகாப்பது என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார். 

போலிச் செய்திகளுக்கும் ஃபேஸ்புக் , கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் அமேசான் தளத்தில் சந்தைக்கு புதிதாக வந்துள்ள ஒரு மொபைல் போன் குறித்து தேடியதாக வைத்துக்கொள்வோம். அப்பொருளை வாங்காத நீங்கள் ஃபேஸ்புக்கில் உங்கள் கணக்கில் உள்நுழைகிறீர்கள், பிறகு உங்கள் ‘Newsfeed’யில் வந்துள்ள போஸ்ட்களை பார்த்தால் அதில் நீங்கள் சிறிது நேரத்துக்கு முன்னர் அமேசானில் தேடிய அதே மொபைலுக்கான விளம்பரம் வந்திருக்கும். இவ்வாறு நாம் இணையத்தில் செய்யும் அனைத்து நகர்வுகளை வைத்துதான் விளம்பரதாரர்களிடமிருந்து கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன. மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு கூகுள் தேடலிலும் எச்செய்தி முன்னணியில் வரவேண்டும் என்பதையும், பேஸ்புக்கில் நமது ‘Newsfeed’யில் எந்த போஸ்ட் எங்கு வரவேண்டும் என்பதையும் அந்தந்த நிறுவனங்கள் தங்களின் பிரத்யேக ‘Algorithm’ என்னும் நெறிமுறைகள் மூலம் நிர்ணயிக்கின்றன. எனவே, கூகுள் மற்றும் பேஸ்புக்கில் போலிச்-செய்திகள் பரவுவதை தடுக்கும்/குறைக்கும் பொறுப்பும், அதிகாரமும் இவ்விரண்டு நிறுவங்களையே சாரும்.

போலிச் செய்திகளுக்கு எதிரான கூகுள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னென்ன?

உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இணையதளங்களில் பெரும்பாலானவைகளின் வருமானம் என்பது அந்தந்த இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானமே ஆகும். இந்நிலையில் பெரும்பாலான இணையதளங்கள் அதில் விளம்பரம் செய்ய நம்பியிருப்பது கூகுளின் விளம்பர சேவையான ‘Adsense’ என்பதாகும். எனவே போலிச்-செய்திகளை பரப்புவதாக எந்த இணையதளமாவது கண்டறியப்பட்டால் அது இனி எவ்வித விளம்பரமும் செய்ய முடியாது என்றும், கூகுள் தேடலில் முதன்மையான இடத்தைப் பெற முடியாத வகையிலான நடவடிக்கைகளுடன் அதை முடக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. 

மேலும், போலிச் செய்திகளை தடுப்பதற்காக தங்களின் Algorithm தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்  எவ்வாறு தயாராகிறது?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே பேஸ்புக் போலிச்-செய்திகளை தடுக்க தவறவிட்டதாகவும், அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் ஃபேஸ்புக்  பயனாளர்கள் தங்களின் ‘Newsfeed’யில் பெறும் குறிப்பிட்ட செய்திகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்றும், ஃபேஸ்புக் தங்களுக்கு வேண்டியவர்களின் செய்திகளை மட்டுமே வைரல் ஆக்குகிறதா என்றும் பலவாறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் போலிச்-செய்திகள் குறித்து பேஸ்புக்கின் நிலைப்பாட்டை அந்நிறுவனத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் ஊழியர்களே அதிருப்தி அடைந்திருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குறித்து கடந்த நவம்பர் 13-ம் தேதி பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயலதிகாரியுமான மார்க் ச‌க்கர்பேர்க் ஒரு நீண்ட விளக்கத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “எங்களின் லட்சியமே ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நினைப்பதை இந்த சமூகத்துக்கு கூறும் வகையிலான குரலை அளிப்பதுதான். இங்கு (பேஸ்புக்கில்) உலாவும் தகவல்களில் போலிச் செய்திகளும், புரளிகளும் வெறும் 1% மட்டுமே. அதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு தேவையான, அவர்கள் விரும்பும் விஷயங்களை, உண்மையான தகவல்களை அளிப்பதையே எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளோம்” என்று கூறியிருந்த ஸுக்கர்பர்க் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்தையும் அதில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்நிலையில் போலி மற்றும் புரளியான செய்திகளை தடுப்பதற்காக பேஸ்புக் எடுத்துவரும், எடுக்கப்போகும் நடவடிக்கைகளை கடந்த 19-ம் தேதி மார்க் வெளியிட்டுள்ளார். அதன்படி வலுவான கண்டறிதல், எளிதான புகாரளிக்கும் நடைமுறை, மூன்றாம்-தரப்பு தகவல் சரிப்பார்ப்பு, எச்சரிக்கைகள், தொடர்புடைய தகவல்களை அளித்தல், தவறான தகவல் அளிக்கும் இணையத்தளங்களின் பொருளாதாரத்தை அழித்தல், வல்லுநர்களிடம் கேட்டறிதல் போன்ற ஏழு செயல்முறைகளைக் கொண்டு போலிச்-செய்திகளுக்கு எதிரான போரை துவங்க உள்ளது ஃபேஸ்புக்!

 

 

தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவிலேயே போலிச்-செய்திகள் குறித்து இதுபோன்ற பல்வேறு குழப்பமும், அச்சமும், எதிர்ப்பும் இருந்து வரும் சூழலில் புதியதாக வந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் மற்றும் நானோ சிப்புகள் உள்ளதாக நம்பிய மக்கள் பலருள்ள நமது நாட்டின் நிலையை நீங்களே நினைத்துப்பாருங்கள் மக்களே! 


ஜெ. சாய்ராம்,
மாணவப் பத்திரிகையாளர்,

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்