சிக்கல் உண்டாக்கிய ஃபேஸ்புக் - வாட்ஸ் அப் கூட்டணி !

சமூகவலைத்தளங்களில் எப்போதும் நம்பர் ஒன் ஃபேஸ்புக் தான். புதுமைகள் செய்து வாடிக்கையாளர்களைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டே இருப்பது ஃபேஸ்புக்கின் ஸ்பெஷல். ஃபேஸ்புக் என்டர்டெயின்மெண்ட் மட்டுமில்லாமல், ஆன்லைன் விற்பனைத்தளமாகவும், விற்பனைக்கு ஏற்ற களமாகவும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் பயனியாளர்கள். இன்னும் பத்து வருடங்களில் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் பயன்பாட்டாளர்கள் விரும்பும் அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனமாக உருவெடுக்கும் என்கிறார் மார்க். 

ஃபேஸ்புக்குக்கு இணையாக வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் உயர்வதைக்கண்டு, போட்டியாகிவிடும் என்பதால் விலைகொடுத்தும் வாங்கினார் மார்க். பெரும்பாலும் ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கினால், அதன் பழைய பிராண்ட் பெயர் மற்றும் அடையாளங்கள் மாற்றப்படும். ஆனால் வாடிக்கையாளர்கள் மனதில் பதிந்துபோன 'வாட்ஸ் அப்' பெயர் மற்றும் லோகோ இன்று வரை மாற்றப்படவில்லை. தங்களது வாடிக்கையாளர்களைக் கவரவும் விளம்பரத்தை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட 'ஆட்டோ சிங்க்' முயற்சி, ஃபேஸ்புக்கிற்கே தற்பொழுது வினையாக முடிந்துள்ளது.

 

இன்று தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கிறது. பெருகிவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளால், இணைய சேவைகளை எளிதாக்க 'ஆட்டோ சிங்க்'  இன்றியமையாதது.

யூடியூப், கூகுள் ப்ளஸ், ஜி-மெயில், கிரோம் பிரவுசர், கிரோம் ஸ்டோர் அப்ளிகேஷன்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதனால் ஜி-மெயிலில் கணக்குவைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தவல்கள் அனைத்தும், மற்ற கூகுள் அப்ளிகேஷன்களுக்கு பதிவேற்றப்படும்.எனவே, புதிதாக கூகுள் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்யும்போது, பெயர் மற்றும் கடவுச்சொல்லை ஒவ்வொரு முறையும் தரத்தேவையில்லை. இதுபோல  வாட்ஸ் ஆப்பில் கொடுக்கப்படும் தகவல்களை, தானாவே ஃபேஸ்புக் எடுத்துக்கொள்கிறது.

இந்த 'ஆட்டோசிங்க் வசதி' மிகுந்த வரவேற்புடையது தான். ஆனால் சில நிறுவனங்கள் வாடிக்கையாளராது அனுமதி இல்லாமலேயே தகவல்களை, மற்ற அப்ளிகேஷன்களுடன் பகிர்ந்து, சிங்க் செய்துவிடுகின்றன. இதற்கு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் சிறந்த எடுத்துக்காட்டுகள். இதனால் பலதரப்பு மக்களிடமிருந்து வந்த எதிர்ப்பால் சாஃப்ட்வேர் நிறுவனங்கள், பிரைவசி பாலிசிக்களைக் கட்டாயமாகக் கடைப்பிடித்து, தனிநபர் தகவல்களை வெளியேவிடாமல் பாதுகாத்து வருகின்றன. சிறிய நிறுவனங்கள் தான் “ஆட்டோ சிங்க்” மற்றும் பிரைவசி பாலிசிக்களில் கவனமாக இருக்கும் இந்த காலத்தில், சமூக வலைதள ஜாம்பவன் ஃபேஸ்புக் இதனைச் செய்யத்தவறியுள்ளது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. 

 

வாடிக்கையாளர்கள் பதிவேற்றும் வாட்ஸ் அப் தகவல்களை ஃபேஸ்புக் அவர்களது அனுமதியின்றி தங்கள் தளத்தில் பயன்படுத்திக்கொள்கிறது. இதனால் ஐரோப்பிய மக்களது இணைய பிரைவசி கேள்விக்குள்ளாகியுள்ளது. தவிர, வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கும் போது ஃபேஸ்புக் தவறான சட்ட ஆவணங்கள் அளித்துள்ளது என ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டியுள்ளது ஐரோப்பா இணையசேவைக் கட்டுப்பாட்டு அமைப்பு.

இந்நிறுவனம் மிகவும் கண்டிப்பானது மட்டுமில்லாமல் இணைய சேவையில் வகுத்துள்ள கட்டுப்பாடுகளை யாருக்காகவும் தளர்த்திக்கொண்டது இல்லை. ஆப்பிள் நிறுவனம் தங்களது ஒப்பந்தக்கட்டுப்பாடுகளை மீறியதற்காக அதன் ஆண்டு வருமானத்தில் 0.93 சதவிகித லாபத்தை அபராதமாகக்கட்ட ஆணையிட்டது என்ற பல கறாரான வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டது இந்த ஐரோப்பா இணைய கட்டுப்பாட்டு சேவை. 

ஃபேஸ்புக்கின் இந்த விதி மீறலால், ஆண்டு வருமானத்தில் ஒரு சதவிகித லாபத்தை, அபராதமாகக் கட்ட ஆணையிட்டுள்ளது ஐரோப்பிய இணைய சேவை. அதுமட்டுமின்றி ஜனவரி 31க்குள் விளக்கமளிக்கவும் பேஸ்புக்கிற்கு கட்டளையிட்டுள்ளது. கணக்கிட்டுப்பார்த்தால் ஃபேஸ்புக் ஐந்து லட்சம் யூரோ அபராதமாக கட்டவேண்டியிருக்கும். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால், ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறாராம் மார்க்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஜி-மெயில் உள்ளிட்ட அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்போது, இணையதளங்களில் பிரைவசி ஆப்ஷன்களை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்வதே நமக்கு நல்லது. அவசியம் என்றால் மட்டுமே 'ஆட்டோ சிங்க்' ஆப்ஷனைப் பயன்படுத்தலாம். 

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!