வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (31/12/2016)

கடைசி தொடர்பு:08:28 (31/12/2016)

அமெரிக்கா ரஷ்யா உறவைச் சிதைத்த அதிபர் தேர்தல்! - மீண்டும் பனிப்போர்!?

அமெரிக்கா

டந்து முடிந்த அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். தேர்தலில் அவர், வெற்றிபெற்றதற்கு ரஷ்யா அதிகாரிகள் செய்த சூழ்ச்சியே முக்கியக் காரணம் என்று கண்டுபிடித்து உள்ளனர். அதன் காரணமாக, ‘‘அமெரிக்காவின் ரஷ்ய தூதரகத்தில் இருக்கும் 35 ரஷ்ய அதிகாரிகள் இன்னும் 72 மணிநேரத்தில் எங்கள் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இல்லை என்றால்... பிரச்னை வேறுமாதிரி இருக்கும்’’ என்று ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.

ட்ரம்ப்க்கு எதிராகப் புகார்கள்!

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில்... ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்பும் மோதினர். இந்த நிலையில், நவம்பர் மாதம் 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஹிலரி கிளிண்டன், குடிமக்கள் போடும் ஓட்டுகளான ‘பாப்புலர் ஓட்டு’களை பெரும்பான்மையாகப் பெற்றிருந்தாலும், தேர்தல் சபை வாக்குகளான ‘எலெக்டோரல் ஓட்டு’களை, அதிகமாகப் பெற்று ட்ரம்ப் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து வரும் 2017 ஜனவரி மாதத்தில் பதவியேற்கும் நிலையில் இருக்கிறார் ட்ரம்ப். இருப்பினும், ஹிலரி கிளிண்டனே அதிக வாக்குகள் பெற்றார். ட்ரம்ப், கிளிண்டனைவிடக் குறைவான வாக்குகளையே பெற்றார் என அடுத்தடுத்த புகார்கள் ட்ரம்ப்-க்கு எதிராக எழுந்தன. மேலும், ‘‘ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர்’’ என்று அமெரிக்காவின் கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

ரஷ்ய அதிகாரிகளே காரணம்!

இந்த நிலையில், நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ககளில் நடத்தப்பட்ட ஹேக்கிங்தான் முக்கியக் காரணம். ட்ரம்ப்தான் வெற்றிபெற வேண்டும் எனச் சில நாடுகள் எண்ணம்கொண்டிருந்தன. இதன் காரணமாக ஹேக்கர்களைவைத்து ட்ரம்ப்க்கு ஆதரவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ‘‘இந்த ஹேக்கிங் செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் ரஷ்ய தூதரகத்தில் இருக்கும் ரஷ்ய அதிகாரிகளே காரணம்’’ என்று எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். இவர், அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஆவார். அத்துடன், அந்த நாட்டின் உளவுத்துறை ரகசியங்களையும் அம்பலப்படுத்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவரிடம் இதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவை அனைத்தையும் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் அறிக்கை!

ஜனாதிபதி தேர்தலில், ட்ரம்ப்க்கு ஆதரவாக ரஷ்ய அதிகாரிகள் ஹேக்கிங் செய்திருப்பதை தற்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும், இந்தச் சதிச்செயலுக்குக் காரணமாக இருந்த ரஷ்ய அதிகாரிகள் 35 பேரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை உத்தரவு விட்டிருந்தது. இதுதொடர்பாக தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கிளிண்டனைவிடக் குறைவான ஓட்டுகள் பெற்ற ட்ரம்ப் வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், ரஷ்ய தூதரகத்தில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் செய்த சூழ்ச்சியாகும். இந்தச் சதிச்செயலை செய்வதற்குக் காரணமாக இருந்த ரஷ்ய அதிகாரிகள் இனி அமெரிக்காவில் இருக்கக் கூடாது. இன்னும் 72 மணி நேரத்தில் அந்த அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தோடு அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், விளைவு வேறுமாதிரியாக இருக்கும்’’ என்று எச்சரித்துள்ளார்.

ஆதாரம் இல்லாத பழி!

ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘‘இதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால், அமெரிக்கா ஏன் இப்படி எங்கள் மீதுகுற்றம் சுமத்துகிறது என்று தெரியவில்லை. இந்தச் செயல் எங்கள் நாட்டை அவமதிப்பதாக இருக்கிறது. ‘கணினித் தகவல்களை மாற்றியமைத்தோம்’ என்று எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா மிகப்பெரிய பழியைச் சுமத்தியுள்ளது’’ என்று கூறியுள்ளார். மேலும், புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், ஆட்சியில் அமரும்வரை அமைதி காக்கப்போவதாகவும், பின் அவரிடம் இதுகுறித்து முறையிடப் போவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்ததுள்ளது. 

ரஷ்ய நிறுவனங்கள் மூட உத்தரவு!

இதனிடையே, ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற 72 மணி நேரம்.... அதாவது, ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்கா கெடு விதித்திருந்தது. ஆனால், இன்றுவரை அந்த ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவைவிட்டு வெளியேறவில்லை. இதனால் இரண்டு ரஷ்ய புலனாய்வு அமைப்புக்களான ஜி.ஆர்.யூ., எஃப்.எஸ்.பி. உட்பட ஒன்பது நிறுவனங்கள் மீதும் ரஷ்யாவுக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மீதும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அமெரிக்கா. மேலும், ‘நியூயார்க் மற்றும் மேரிலண்டில் உள்ள ரஷ்ய உளவு நிறுவனங்கள் பயன்படுத்திய இரண்டு அலுவலகங்களையும் விரைவாக மூடவேண்டும்’ என அமெரிக்கா அறிவித்துள்ளது.

பதற்றத்தில் உலக நாடுகள்!

‘ரஷ்ய அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என அறிவித்து... பின், ரஷ்ய நிறுவனங்களையும், புலனாய்வு அமைப்பையும் மூடுவதற்கு அதிரடியாக உத்தரவிட்டிருக்கும் அமெரிக்கா மீது... ரஷ்யா கடும் கோபம் கொண்டிருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏதேனும் விபரீத விளைவுகள் ஏற்பட்டுவிடுமா என அனைத்து நாடுகளின் உளவுத்துறை பிரிவுகளும் கண்காணிப்புச் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்ப்க்கு நிறைய சவால்கள் காத்திருக்கும் வேளையில்... அதிபர் பதவியில் இருந்து விடை பெற இருக்கும் ஒபாமா, ‘ரஷ்ய அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ எனச் சொல்லியிருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  

- ஜெ.அன்பரசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்