சவுதியில் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் பெண்கள்..! வைரல் வீடியோ | Music clip sparks debate and celebration in Saudi Arabia

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (07/01/2017)

கடைசி தொடர்பு:12:53 (07/01/2017)

சவுதியில் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் பெண்கள்..! வைரல் வீடியோ

சவுதியில் ஆணாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விதத்தில் ஒரு பாடல் இயற்றப்பட்டு, யு- டியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தப் பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. 

சவுதி பாடல்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனைத் தளர்த்த வேண்டுமென்று அடிக்கடி பெண்கள் கோரிக்கை வைப்பர். ஆனால், ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் கவலைகள் (Hwages) என்ற தலைப்பில் பாடல் உருவாக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம்  யூ- டியூபில் பதிவேற்றப்பட்டது. சவுதியைச் சேர்ந்த 8ies  என்ற நிறுவனம் இந்த வீடியோவைத் தயாரித்துள்ளது. அட்டகாசமான இசையில் பெண் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குநர் மஜின் அல் ஈஷா இந்த வீடியோவை இயக்கியுள்ளார். 

சவுதியின் கிராமப்புறக் கூத்துப் பாடலைத் தழுவி இயற்றப்பட்டுள்ள இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும், ஆண்களைக் கடுமையாக விமர்சிக்கிறது. மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இருந்து இப்படி ஒரு பாடல் வெளிவந்திருப்பது, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்தப் பாடலை இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

'ஆண்களிடமிருந்து கடவுளால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும்' ( If only God would rid us of men ) என பாடல் தொடங்குகிறது. அதில், சவுதி அரேபிய இஸ்லாமிய பெண்கள் கார் ஓட்டுகின்றனர்; கூடைப்பந்து விளையாடுகின்றனர்; ஸ்கேட்டிங் செல்கின்றனர்; ஸ்கூட்டர் ஓட்டுகின்றனர்; ஆனந்தமாக நடனம் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் பர்தா அணிந்தவாறே செய்கின்றனர். ஆனால், பர்தாவுக்குள்  நாகரிக உடை அணிந்திருக்கின்றனர். பாடலில் இரு அராபியர்கள், ஸ்கேட்டிங்  செய்யும் பெண்களைத் தடுக்க முயல்கின்றனர்.

சவுதியில் பெண்களுக்குக் கார் ஓட்ட அனுமதி இல்லை. டிரைவிங் லைசென்சும் பெற முடியாது. இந்த வீடியோவில் ஒரு சிறுவன் கார் ஓட்டுவான். ஆனால், பெண்களுக்கு அந்த உரிமை இல்லை என்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் விமர்சிக்கிறது இந்தப் பாடல். அவரை 'ஹவுஸ் ஆஃப் மேன்' தலைவர் என குறிப்பிடுகிறது.  ஹிலரியை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியிருப்பது, பெண்களுக்கு நல்லதல்ல என்றும் பாடல் சொல்கிறது.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்களை கட்டுப்படுத்த முயன்றவர்களுடன் சேர்ந்து டொனால்ட் ட்ரம்பும் காரில் அமர்ந்து போவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. 'ஆண்கள் என்ற ஒரு இனம் அழிந்து போனால், அதற்கு அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதே காரணமாக அமையும்' என்றும் அந்தப் பாடலில் ஒரு வரி இடம் பெற்றுள்ளது. ‛ஒவ்வொரு ஆணும் உள்ளுக்குள் ஒரு மிருகம்’ என்கிறது இன்னொரு வரி. 'நாங்கள் இப்படித்தான் வாழ ஆசைப்படுகிறோம்' என்கிறது மற்றொரு வரி. 

கடந்த ஆண்டு இதே அல் ஈஷா இயக்கிய 'பார்ப்ஸ் 'என்ற பாடலும் சர்ச்சையில் சிக்கியது. உள்ளுர் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதான் அந்த பாடலின் நோக்கம். இந்தப் பாடல் சர்சைக்குள்ளாகியுள்ள நிலையில்தான், தற்போது மற்றொரு பாடல் வைரல் ஆகியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தாலும், எதிர்ப்புகளும் கிளம்பாமல் இல்லை. 

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்