வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (07/01/2017)

கடைசி தொடர்பு:14:46 (07/01/2017)

அகதிகள்... அழுத்தங்கள்... சில மரணங்கள்!

நெருக்கியடித்து நிறைந்திருக்கும் குடிசைகள். கூரைகளில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரத்தின் காரணமாக மண் தரை சொதசொதப்பாய் இருந்தது. கால்கள் சேற்றில் படாமல் நடப்பது என்பது இயலாத காரியம். வட்டமான முகம், கொஞ்சம் சப்பையான மூக்கு, குட்டையான உருவம், மாநிறம் எனக் கொஞ்சம் சீன - திபெத் சாயலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கெரென் (Karen) இன மக்கள். இடம் - தாய்லந்து, மியான்மர் எல்லையில் இருக்கும் மயி லா (Mae La) அகதிகள் முகாம். 

அகதிகள், மரணங்கள், Refugees, Thailand, Burma

காட்சி 1:
கூரை ஓட்டைகளில் ஒழுகும் நீரைப் பிடிக்க அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சட்டிகளை வைத்துவிட்டு வாசற்படியில் வந்து அமர்கிறார் அந்த மூதாட்டி. அவரின் கண்கள் யாரையோ தவிப்போடு தேடிக் கொன்டிருக்கிறது. இருட்டும் வரைக் கொஞ்சம் திடமாகத் தான் இருக்கிறார். வெளிச்சம் மறைய, இருள் சூழ பதட்டமடைகிறார். சத்தம் வராத வகையில் அழுகிறார். தாரை தாரையாகக் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. கொஞ்சம் தேம்புகிறார். நீல வண்ணப் பாவாடையில், வெள்ளைப் பூக்கள் வரையப்பட்டிருந்தது. அதைக் கொண்டு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

"பக்கத்து தோட்டத்துக்கு வேலைக்குச் சென்ற கணவர் மூன்று நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. ராணுவத்திடம்  மாட்டிக் கொண்டாரா?, உயிரோடு இருக்கிறாரா? என்று எதுவும் தெரியவில்லை..." என்று அவரிடம் சில நொடிகள் நின்ற அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு, வீட்டிற்கு கதவாக செயல்படும் அந்த மூங்கில் தட்டின் மீது தலை சாய்த்து அமைதியாக உட்கார்ந்துக் கொள்கிறார் மூதாட்டி. 

பின் குறிப்பு: மயி லா அகதிகள் முகாமில் இருப்பவர்கள், முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. அவர்கள் எங்காவது சென்று வேலை செய்தால், அது பெருங் குற்றம். 

அகதிகள், மரணங்கள், Refugees, Thailand, Burma

காட்சி 2:
"கதாய் மெய்", 23 வயதான பெண் . மூத்தவரான இவருக்கு எட்டு சகோதர, சகோதரிகள். சில நாட்களுக்கு முன்னர், இவரின் அம்மாவுக்கும் - அப்பாவுக்கும் பெரிய பிரச்னை. ஒரு கட்டத்தில் கதாயின் அப்பா, அவர் அம்மாவைக் கத்தியால் குத்திவிட்டார். பிள்ளைகள் அனைவரும் அம்மாவை நோக்கி ஓட... சில நொடிகளில் அவர் அப்பாவும் தன்னைத் தானே அந்தக் கத்தியில் குத்திக் கொண்டார். இருவரின் ரத்த வெள்ளத்துக்கு மத்தியில், என்ன செய்வதென அறியாமல் அலறிக் கொண்டிருந்தனர், அந்த சின்னஞ்சிறு பிள்ளைகள். 

ஒரு வழியாக கதாய் இருவரையும் முகாம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அது வெறும் முதலுதவி செய்யும் வசதிகள் கொண்ட மருத்துவமனை மட்டுமே. அங்கிருப்பவர்கள் அடுத்து என்ன செய்யலாம், இங்கிருந்து எப்படி கொண்டு செல்வது, அனுமதி வழிமுறைகளை ஆராய்ந்து முடிப்பதற்குள்... இருவரின் உயிரும் ஒரு சேர பிரிந்தது. அந்தப் பிள்ளைகள் அணு அணுவாய் தங்கள் பெற்றோர் இறப்பதைக் கண் முன் கண்டார்கள்.

பின் குறிப்பு: கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலேயே முடங்கிக் கிடக்கும் அகதிகள் அதிகப்படியான மன அழுத்தத்துக்கு ஆளாகி பரிதவித்து வருகின்றனர். 

காட்சி 3: 
கிரேசியா ஃபெல்மெத் ( Gracia Fellmeth) என்ற பெண் மருத்துவர், இந்த முகாமில் சில மாதங்கள் தங்கியிருந்து, சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வருகிறார். கர்ப்பிணி பெண்களிடத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள் குறித்து ஆராய்கிறார். தன்னிடம் வரும் கர்ப்பிணிகளின் உடலைப் பரிசோதிப்பதோடு, அவர்களுடைய மனநிலையையும் ஆராய்கிறார். அப்படியான சந்தர்ப்பத்தில் தான் மியோ மியோவும் வருகிறார். ஒன்பது வார கர்ப்பிணி. குடும்பத்தில் சில பிரச்னைகள் இருப்பதைத் தவிர வேறு பிரச்னைகள் இல்லை என்று கருதி, கிரேசியா அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. 

முதல் பரிசோதனை முடித்த இரண்டாவது நாள் இப்படி ஒரு செய்தி வருகிறது. மியோ மியோவும், அவள் கணவரும் ஒரு சேர தற்கொலை செய்து கொள்கிறார்கள். காரணம்...???!!! வாழ்வதற்குப் பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை...சாவில் நிம்மதி தெரிந்தது. 
இப்படியான காட்சிகளும், கதைகளும் நெஞ்சை அறுக்க, தன் ஆராய்ச்சிகளை எல்லாம் கைவிட்டுவிட்டு தாள முடியா துயரத்தோடு முகாமை விட்டு வெளியேறிவிட்டார் கிரேசியா. இதுவரை அந்த அகதிகளுக்கு உண்ண உணவில்லை, படுக்க இடமில்லை என்று மட்டுமே மனித மனங்களுக்குப் பரிதாபப்படத் தெரிந்திருந்தது. அவர்களின் மன அழுத்தம் இப்படி இருக்கும் என்பதை யாரும் பெரிதாக யோசிக்கவில்லை. கிரேசியா அதை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

அகதிகள், மரணங்கள், Refugees, Thailand, Burma

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, திபெத்தின் மலைவாழ் மக்களான  கெரென் இனம் தங்கள் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  1984-ல் பர்மாவில் இருந்து அகதிகளாய் வெளியேறிய 1100 கெரென் இன மக்கள், தாய்லந்தின் மயி லா முகாமில் அடைக்கப்பட்டனர். இன்று 40 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கெரென் இனத்தில் கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இவர்களைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க தாய்லாந்து மறுக்கிறது. பர்மாவோ இவர்களைக் கடுமையாக வெறுக்கிறது. சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் என எந்த ஆவணங்களும் கிடையாது. பிறக்கும்போதே அகதிகளாகத் தான் பிறக்கிறார்கள். வெளி உலகம் தெரியாது. இரண்டு தலைமுறைகளாய் வேலிக்குள் அடைந்திருக்கும் இவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வாழ்ந்த காலம் இருட்டாகி, வாழும் காலம் நரகமாகி, வாழப் போகும் காலத்தின் உத்தரவாதமில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்... நம்மைப் போன்றே சதையும், எலும்பும், நரம்பும், குருதியும் கொண்ட சக மனித இனம்!!! 

                                                                                                                                                                     -  இரா. கலைச் செல்வன்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்